நாடும் நடப்பும்

பிளஸ் 2 தேர்வுகள் ரத்து சரிதான், கல்லூரியில் படிப்பு சேர்க்கையில் தான் சிக்கல்!

ஆர்.முத்துக்குமார்

கடந்த கல்வியாண்டில் 11ம் வகுப்பு அதாவது பிளஸ் 1 மாணவர்களுக்கு இறுதிப் பரீட்சை நடத்த முடியாத சூழ்நிலையில் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு பிளஸ் 2 விற்கு வந்தது நினைவிருக்கலாம்.

இம்முறையும் தமிழகத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு

பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது அதற்கு ஆசிரியர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

தேர்வுகளைக் காட்டிலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியமும் அவர்களின் உயிரும் முக்கியமானது என்ற கண்ணோட்டத்தில் இம்முடிவை தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்திருப்பது ஏன்? என்பது புரிகிறது. அது சரி தான் என்று பள்ளி ஆசிரியர்கள் அமைப்புகளும் பெற்றோர் சங்க நிர்வாகிகளும் கூறி வருகிறார்கள்.

ஆனால் மேற்படிப்பிற்கு செல்லப் போகும் மாணவர்கள் யார் – யார்? அவர்களை எந்த அடிப்படையில் தரவரிசைப் படுத்துவது என்பன கல்வித்துறை அதிகாரிகளுக்கும் முதல்வருக்கும் மிகப்பெரிய தலைவலி என்பதும் உண்மை தான்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைத்திருப்பது மாணவர்கள் மீதான அரசின் அக்கறையை உணர்த்துகிறது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன், பொதுச் செயலாளர் என்.ரவி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். பிளஸ் 2 மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சமூக நீதிக்கு எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு எல்லா மாணவர்களின் கனவு திட்டமாகும். ஆகவே மிக அதிக மதிப்பெண் எடுத்து வரும் மாணவர்களுக்கே கல்லூரிகளில் இடம் தரப்பட்டு வருவதையும் அறிவோம்.

கடந்த ஆண்டு 11 ம் வகுப்பு பரீட்சையில் எடுத்த மதிப்பெண்கள் முழு பரீட்சைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்த சில பரீட்சைகளின் முடிவில் எடுத்த மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவு செய்யும் வரை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகவே இம்முறை ‘ஆல் பாஸ்’ அறிவிப்பால் எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப் போகிறார்கள்?

மருத்துவ படிப்புக்கும் பொறியியல் படிப்புக்கும் நுழைவு தேர்வு வைத்தே படிப்போர் பட்டியலைத் தயார் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் ஆன்லைனில் அப்படி நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் தான் உண்மையில் விடை தருகிறார்கள் என்பதும் உத்திரவாதம் இல்லாத நிலையில் தகுதியில்லா மாணவர்கள் வருங்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ வந்து விட்டால்? என்ற அச்சக் கேள்வியும் எழுகிறது.

நீட் பரீட்சையை எதிர்க்கும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எடுக்க இருக்கும் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது.

நிபுணர்களின் ஆலோசனை பெற்று நல்ல முடிவை எடுக்க ஸ்டாலின் திட்டம் வெற்றி பெற்றால் நாடே அந்த முறையை பின்பற்றும்!

இதற்கு வேறு வழி ஏதேனும் உண்டா? 1989 ல் முதல் முறையாக 10, 12 முறையில் இறுதிப் பரீட்சையை எழுதிய மாணவர்களின் நிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான்!

அதே ஆண்டில் பியூசி, அதாவது Pre University படித்த மாணவர்களுக்கும் மேற்படிப்பிற்கு கல்லூரிகளில் இடம் கொடுத்தாக வேண்டும்!

அந்த பியூசியை நிறுத்தி விட்டதால் முதல்முறையாக பள்ளிகளிலிருந்து நேரடியாக கல்லூரிப் படிப்புக்கு செல்ல வேண்டியவர்ளுக்கு என்ன செய்வது? என்ற கேள்வியும் இருந்தது.

அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா? 2 பிரிவு மாணவர்களுக்கும் அதே ஆண்டில் இரு வேறு காலக்கட்டத்தில் கல்லூரிப் படிப்புக்கு அனுமதி வழங்கியது.

அதாவது பியூசி மாணவர்கள் பிப்ரவரியில் இறுதிப் பரீட்சையை எழுதி முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்தில் முடிவுகளை அறிவித்துவிட்டு மே மாதத்தில் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

ஆனால் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கோ ஏப்ரல் முடிவில் தான் இறுதிப் பரீட்சை, பிறகு ஜூன் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு தான் இந்த பிரிவு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் வகுப்புகள் ஆரம்பமானது!

அன்றைய குழப்பத்திற்கு அப்படி ஓர் முடிவு உதவியது போல் இம்முறையும் ஒருதலைமுறை மாணவர்கள் 6 மாதங்களுக்கு பிறகு இறுதிப் பரீட்சையை எழுதிவிட்டே கல்லூரிகளில் சேர்க்கப்பட்டால் நல்லது தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *