செய்திகள்

பிளஸ்–-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா

சென்னை, மே.17-

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உயர் அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை முன்னெடுக்க இருக்கிறது.

பிளஸ்-–2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான தேர்வு முடிவு கடந்த 10-ந்தேதியும் வெளியானது. தேர்வு எழுதியவர்களில் பிளஸ்-–2 தேர்வில் 94.56 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.சி.யில் 91.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு முடிவில் 397 அரசு பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், 1,364 அரசு பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும் அடைந்துள்ளன.

அவ்வாறு 100 சதவீத தேர்ச்சி அடைந்த 1,761 அரசு பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவ–-மாணவிகள், உயர் அலுவலர்களை சென்னைக்கு அழைத்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதல் முறையாக பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. எப்போது இந்த விழா நடைபெறும் என்பது குறித்த விவரத்தை கல்வித்துறை விரைவில் தெரிவிக்க இருக்கிறது.

இதுதவிர, இந்த சீர்மிகு பாராட்டு விழாவில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–-2 பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவ-–மாணவிகளும் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,761 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது வரலாற்று சாதனை ஆகும். பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் இது மேலும் ஒரு மைல் கல். இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் நம் முதல்-அமைச்சரின் பல்வேறு மாணவர் மைய திட்டங்களும், சிறப்பான வழிகாட்டல்களும் ஆகும்.

அந்த வகையில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம் சென்னையில் சீர்மிகு விழா நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படுவதுடன், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் எட்டவும் வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *