செய்திகள் போஸ்டர் செய்தி

பிளஸ்–1 பொதுத்தேர்வு முடிவுகள்: 96.04% மாணவர்கள் தேர்ச்சி

* கோவை மாவட்டம் 98.10% தேர்ச்சி பெற்று முதலிடம்

* 2,716 பள்ளிகளில் 100% பாஸ்

பிளஸ்–1 பொதுத்தேர்வு முடிவுகள்: 96.04% மாணவர்கள் தேர்ச்சி

+2 மறுதேர்வு முடிவுகளும் வெளியீடு

சென்னை, ஜூலை 31–

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவர்களாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர். இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18 ஆகும்.

இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%. மாணவிகள் 97.49% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 94.38%. மாணவியர் மாணவர்களைவிட 3.11% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்–லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன. கோவை முதலிடம்

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை மாவட்டம் 98.10 % பெற்று முதலிடத்தில் உள்ளது. 97.90 % தேர்ச்சியுடன் விருதுநகர் 2வது இடமும், 97.51% தேர்ச்சியுடன் கரூர் 3வது இடமும் பெற்றுள்ளது.

91.96 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 92.71% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 96.95% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 97.56 %, ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.77 % ஆகும்.

மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 99.51%,

2,716 மேல்நிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் – 96.68 சதவீதம், வேதியியல் – 99.95 சதவீதம், உயிரியல் – 97.64 சதவீதம், கணிதம் – 98.56 சதவீதம், தாவரவியல் – 93.78 சதவீதம், விலங்கியல் – 94.53 சதவீதம், கணினி அறிவியல் – 99.25 சதவீதம், வணிகவியல் – 96.44 சதவீதம், கணக்குப் பதிவியியல் – 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

+2 மறுதேர்வு முடிவுகள்…

கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்–2 மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *