செய்திகள்

பிளஸ் 1 தேர்வு முடிவு: 91.17% மாணவர்கள் தேர்ச்சி; கோவை மாவட்டம் முதலிடம் – 96.02% தேர்ச்சி

கணினி அறிவியல் 3432 மாணவர்கள் சதம்

வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

சென்னை, மே 14–

பிளஸ்–1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே (94.69%) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார்.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 4ல் துவங்கிய பொதுத்தேர்வு மார்ச் 25ல் முடிந்தது. தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 ஆகும். இதில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்கள் அடங்கும்.

தேர்ச்சி சதவீதம் அதிகம்

பிளஸ்–1 பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539, இது 91.17 சதவீத தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.24 அதிகமாகும். இதில் மாணவிகள், 4 லட்சத்து 4 ஆயிரத்து 143, (94.69 சதவீதம்), மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் (87.26 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 221. இதில் 7 ஆயிரத்து 504 (91.27%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 187. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 170 பேர்.

1,964 பள்ளிகள் 100% தேர்ச்சி

பொதுத்தேர்வு எழுதிய மொத்தமுள்ள 7534 மேல்நிலைப்பள்ளிகளில், 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,964 ஆகும். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 241 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36%, தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09%, இருபாலர் பள்ளிகள் – 91.61%

பெண்கள் பள்ளிகள் – 94.46% ஆண்கள் பள்ளிகள் – 81.37% இடம் பிடித்துள்ளன.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 94.31%, வணிகவியலில் – 86.93%, கலைப்பிரிவுகள் 72.89%, தொழிற்பாடப் பிரிவுகள் 78.72% தேர்ச்சி் பெற்றுள்னர்.

கோவை முதலிடம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.02 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 95.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. விருதுநகர் மாவட்டம் 95.06 சதவீதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. சென்னை மாவட்டம் 91.68% தேர்ச்சி.

குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 81.40 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணினி அறிவியலில் 3432 பேர் சதம்

தமிழ் பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 13 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 696 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இதேபோல வேதியியல் – 493 பேர், உயிரியல் – 171 பேர், கணிதம் – 779 பேர், தாவரவியல் – 2 பேர், விலங்கியல் – 29 பேர், கணினி அறிவியல் – 3432 பேர், வணிகவியல் – 620 பேர், கணக்கு பதிவியல் – 415 பேர், பொருளியியல் – 741 பேர், கணினிப் பயன்பாடுகள் – 288 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 293 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர்.

பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,418 ஆகும்.

பிளஸ்–1 தேர்வு முடிவுகளில் பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 97.23 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 96.20 சதவீதம் பேரும், உயிரியல் – 98.25 சதவீதம் பேரும், கணிதம் – 97.21 சதவீதம் பேரும், தாவரவியல் – 91.88 சதவீதம் பேரும், விலங்கியல் – 96.40 சதவீதம் பேரும், வணிகவியல் – 92.45 சதவீதம் பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் 95.22 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *