செய்திகள்

பிளஸ்டூ தேறிய 100 ஏழை மாணவருக்கு என்ஜினீயரிங், மருத்துவம், சட்டம் படிக்க ‘மாக்மா’ நிதி நிறுவன உதவித்தொகை

சென்னை, ஆக. 4–

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 31 ஆண்டுகளாக நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனமான ‘மாக்மா பின்கார்ப்’, நாடு முழுவதும் உள்ள பிளஸ்டூ தேறிய ஏழை மாணவர்கள் 100 பேருக்கு கல்வி உதவித் தொகையை வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது என்று இந்த நிறுவன கார்ப்பரேட் தகவல் தொடர்பு தலைவர் கவுசிக் சின்கா தெரிவித்தார்.

‘மாக்மா’ நிறுவனம் இதுவரை 16 மாநிலங்களைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் 100 ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க தேர்வு செய்ய உள்ளது.

‘எம்.ஸ்காலர்’ என்னும் இந்த உதவித் திட்டத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த பிளஸ்டூ தேர்வில் 80%க்கும் அதிகமான மார்க் பெற்றவர்கள், என்ஜினீயரிங் மருத்துவம், சட்டம் படிக்க கல்வி உதவித் தொகையை ‘மாக்மா’ மூலம் பெறலாம் என்றார்.

மாக்மா சமுதாய நல திட்டமாக கல்வி உதவித் தொகை, புத்தகங்கள், பள்ளி பொருட்கள், மதிய உணவு பள்ளி உள்கட்டமைப்புக்கு நிதி உதவி அளிக்கிறது.

‘மாக்மா பின்கார்ப்’ ரிசர்வ் வங்கியிடமிருந்து 1989ல் அனுமதி பெற்றது. மும்பை, தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ளது. வணிகம், விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் போன்ற நிதி வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு 21 மாநிலங்களில் 327 கிளைகள் உள்ளது. இதற்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ரூ. 16 ஆயிரத்து 134 கோடிக்கு கடன் வழங்கி உள்ளது.

சென்னையில் ‘மாக்மா பின்கார்ப்’ நிறுவனம் அமிஞ்சிக்கரை நெல்சன் மாணிக்கம் சாலை, நவீன்ஸ் பிரசிடியம் வளாகத்தில் செயல்படுகிறது. இது பற்றி அறிய www.magma.co.in வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *