கோவை, ஜூன் 27–
பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானியாற்றில் திறக்கப்படுகிறது. இதனால் பவானியாற்று கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரமான பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. மழை தீவிரமடைந்ததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து இன்று (ஜூன் 27) அதிகாலை பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடி என்றாலும், 97 அடியை கடந்தால், அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
அணைக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால், இந்த 14 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக, அணையின் பிரதான 4 மதகுகள் வழியாக பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பவானியாற்றில் நீரின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் பவானியாற்று கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.