செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை : குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி, ஆக. 25–

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அவரது 3 வது குழந்தையை தரையில் அடித்து கொன்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் 7 பேரை அந்த கும்பல் படுகொலை செய்தது. இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த இவர்களை, இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு, குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்தது.

குஜராத் அரசுக்கு கேள்வி

இதற்கிடையில், 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி என்.வி.ரமணா, ‘பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் தண்டனைக் குறைப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தண்டிக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் அவரது மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசும், குஜராத் அரசும் உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்’ எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.