மணிலா, டிச. 30–
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்சில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:– கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வந்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 22 பேர் வடக்கே உள்ள மிண்டனாவ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.
24 பேர் மாயம்
இது தவிர, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 24 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இன்னும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.