நியூயார்க், செப் 10
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, பென்சில்வேனியா மாகாணத்தில் கமலா–டிரம்ப் இடையே இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நேரடி விவாதம் நடைபெற உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் வாக்குறுதிகளையும் கூறிவருகின்றனர்.
தற்போது வரை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நிற்கும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருக்கிறது என அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடக்கும் இந்த அதிபர் தேர்தலில் சுவாரஸ்யமான விஷயமே தேர்தலில் களமிறங்கும் இருவரும் நேரடி விவாதம் செய்வதுதான்.
நடைபெறப் போகும் தேர்தலுக்கான அதிபராகப் போட்டியிடும் ட்ரம்ப்பும், கமலா ஹாரிஸும் இடையிலான முதல் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் ஃபிலெடெல்பியா நகரில் மிகுந்த பாதுகாப்புகளுடன் இந்திய நேரப்படி நாளை (புதன்கிழமை) காலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.
கமலாவுக்கு ஆதரவு
இதற்கு முன் கடந்த ஜூன்-27ம் தேதி தற்போதைய அமெரிக்கா அதிபரான ஜோ பைடனும், டிரம்பும் நேரடி விவாதம் மேற்கொண்டனர். அதில், முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் நன்றாகவே பதிலளித்திருந்தார். ஆனால், ஜோ பைடனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தடுமாறினார். இந்த தடுமாற்றத்தால் தான் அவர் அதிபர் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.
அதன் பிறகு ஜனாதிபதி வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். அவர் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் செய்யும் சின்ன விஷயங்களும் மக்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது. இதனால், அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது. அதே போல டிரம்ப்புக்கு, எக்ஸ் வலைத்தள உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அதன்படி அவரை கடந்த ஆகஸ்ட்-13 ந்தேதி எலான் மஸ்க் “எக்ஸ் ஸ்பேஸ்”-ஸில் நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில், துணை அதிபரான கமலா ஹாரிஸை தாக்கி பேசியிருந்தார். இப்படி இருக்கையில், இருவரும் நாளை முதல் முறையாக நேரடி விவாதம் செய்யவுள்ளனர். இதனால், பெரும் எதிர்பார்ப்பு அமெரிக்கா மக்களிடையே உருவாகி இருக்கிறது.