சிறுகதை

பிற்பகல் – ஜூனியர் தேஜ்

வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப் போகும் மாணவர்கள் தன்னைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கையில் புத்தகம், பாடக்குறிப்பேடு போன்றவைகளைக் கொண்டு செல்வார்கள். புன்னகையோடு மாணவர்கள் முன் பேசுவார்கள்.

ஒரு சில ஆசிரியர்கள் கையில் பிரம்போடும் முகத்தில் இறுக்கத்தோடும் சென்று, முதல் பார்வையிலேயே மாணவர்களுக்கு பய உணர்வைத் தூண்டிவிடுவார்கள்.

ஆனால் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வித்தியாசமானவர்.

“எந்த விதத்தில் வித்தியாசமானவர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன்.

நவநீதகிருஷ்ணன் சார், ஒரு பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டுதான் வகுப்புக்குப் போவார். மேஜையில் அந்தக் குவளையை வைப்பார். புன்னகையும் இல்லாமல், இறுக்கமும் இல்லாமல் மையமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார்.

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்களில் ஒருவரேனும் முதல் பிரிவேளை முடிவதற்குள், எழுந்து நின்று ஒற்றை விரலைக் காட்டுவான்.

அதைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டே இருப்பார் நவநீத கிருஷ்ணன் சார்.

பிரேக்கை தளர்த்தியதும் சரக்’ என முன் நகரும் மோட்டார் வாகனம் போல, மேஜையிலிருந்து குவளையை எடுத்துகொண்டு, மாணவனின் முன் வந்து நிற்பார்.

‘இந்தா..” என்று அவன் கையில் குவளையைக் கொடுப்பார்.”

ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த முழிப்பான் அந்தச் சிறுவன்.

வகுப்பிலுள்ள எல்லாச் சிறுவர்களும் ஒன்றும் புரியாமல் முழிப்பார்கள்.

“இங்கேயே இதிலே போ..” என்பார்.

இப்படி ஒரு உத்தரவை ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்காத அந்த விரல் நீட்டியவன் ஸ்தம்பித்துவிடுவான்.

அவனைப் பார்த்து மொத்த மாணவர்களும் திகைப்பும் பயமுமாய் இருப்பார்கள்.

பள்ளியில் சேர்ந்து முதல் நாள் இந்த அனுபவத்தைப் பெறும் எந்த மாணவனும் அந்த ஆசிரியரை வாழ் நாளில் மறக்கவே மாட்டான். அதோடு அன்று முதல் நவநீதகிருஷ்ணன் சார் வகுப்பில் எந்த மாணவரும் ஒற்றை விரலை நீட்டவே மாட்டார்கள்.

பள்ளியில் சேர்ந்த முதல் நாள் இந்த அனுபவத்தை தன் ஆசிரியர் கணபதிராமன் அவர்களிடம் பெற்ற நவநீதகிருஷ்ணன் சார், தன் ஆசிரியரையே ரோல் மாடலாகக் கொண்டு இந்த டெக்னிக்கை தானும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்.

அன்று முகூர்த்த நாள்.

ஒரு நண்பரின் திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தார் நவநீத கிருஷ்ணன் சார்.

அந்த திருமணத்துக்குப் பேரனோடு வந்திருந்தார் 80 வயது கணபதிராமன்.

வரவேற்பில் இருந்த அனைவரும் முதியவர் கணபதிராமனய்யாவை நன்கு உபசரித்து, முன் வரிசையில் உட்காரச் சொல்லி வற்புறுத்தினர்கள்.

“தாத்தாவுக்கு முன் வரிசைச் சரிப்பட்டு வராது!” என்றான் அவரை அழைத்து வந்த பேரன்.

மண்டபத்தின் பின் வரிசையில் ஓர் ஓரமாகத் தாத்தாவை அழைத்துச் சென்றான். அருகாமையில் யாருமே இல்லாத தனிமையில் அமர வைத்தான்.

எட்டத்திலிருந்த அவரைப் பார்த்தவர்கள், அவர் அருகே வந்து கையெடுத்துக் கும்பிடுவதும், கால் தொட்டு வணக்குவதுமாய் நடித்தார்கள்.

“ஆகாராம் ஆச்சா..? கொண்டு வரட்டுமா..?” – என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டார்கள்…

‘முன்னே வாருங்கள்..!” என்று ஒரு பேச்சுக்காக அழைத்தார்கள்.

உறவுகளும் நட்பும் சூழ்ந்து கொண்டு நடித்துக்கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பேரன் டிபன் சாப்பிட டைனிங் ஹால் சென்றான்.

திருமணத்திற்கு வந்திருந்த நவநீதகிருஷ்ணன் எதேச்சையாக கணபதிராமன் சாரைப் பார்த்தார்.

அவரிடம் படித்த அந்த நாட்கள் நினைவில் நிழலாடின. தான் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் கணபதிராமன் சாரிடம் பெற்ற குவளை அனுபவம் நினைவில் முந்தி நின்றது.

தான் ரோல் மாடலாக வைத்துக் கொண்டுள்ள கணபதிராமன் சாரிடம் சென்று ஆசி பெறஅருகில் சென்றார் நவநீத கிருஷ்ணன்.

“என்னை அடையாளம் தெரியுதா சார்? நான் உங்க மாணவன்..”.

மெதுவாகத் தலை தூக்கிப் பார்த்தார் கணபதிராமன் சார். அவர் பார்வையில் கழிவிரக்கம் தெரிந்தது.

கையெடுத்துக் கும்பிட்டார்.

அருகில் , பேரனைத் தேடினார் கணபதிராமன்.

அவன் அங்கே இல்லை.

“யாரைச் சார் தேடறீங்க..?” கேட்டார் நவநீத கிருஷ்ணன்.

கணபதிராமன் சார் பேசவில்லை. நவநீதனின் கண்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை.

“அந்த ஒயர் கூடைய எடுக்க முடியுமா?” என்று உடல் மொழியாலேயே கேட்டார். ஒற்றை விரலைக் காட்டினார்.

தன் ஆசிரியரும் ரோல் மாடலுமான கணபதிராமன் சார் அவர்களின் உடல் மொழியையும், தேவையையும் அறிந்த நவநீதகிருஷ்ணன் சார், , ஒயர் கூடைப் பையிலிருந்த பிளாஸ்ட்டிக் குவளையை எடுத்து அவர் கையில் தந்தார்.

பிரைவசிக்காகச் சற்றே தள்ளி நின்று கொண்டார்.

கொடுத்த குவளையை வாங்குவதற்குப் பேரன் வந்துவிட்டான்.

நவநீத கிருஷ்ணன் சார் கனத்த இதயத்தோடு வீடு திரும்பினார்.

மறுநாள் இறைவணக்கக் கூட்டம் முடித்து மாணவர்கள் எல்லோரும் வகுப்புக்குச் சென்றதும் வகுப்புக்குள் நுழைந்தார் நவநீதகிருஷ்ணன் சார்.

வழக்கமாய்க் குவளையோடு வகுப்புக்கு வரும் நவநீதகிருஷ்ணன் சார். இன்று குவளையில்லாமல் வருவதைப் பார்த்தபோது மாணவர்களுக்குக் காரணம் புரியாவிட்டாலும் சந்தோஷமாக இருந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *