செய்திகள்

பிறப்பு பதிவேட்டில் இனி பெற்றோரின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம்: உள்துறை அமைச்சகம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஏப்.5–

பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை மாநில அரசுகள் அமல்படுத்தும் முன்னர் முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. குழந்தையின் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதன் நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இது பொருந்தும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிறப்பு, இறப்பு தரவுகள் தேசிய அளவில் பராமரிக்கப்படும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசுப் பணிகளுக்கான நியமனம், திருமணப் பதிவு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை , வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்ற பல சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாக செயல்பட ஏதுவாக இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவு தளத்தை பராமரிக்க பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிறப்பைப் பதிவு செய்யும் ஆவணத்தில் குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது என்று கூறப்படுகிறது. பிறப்புப் பதிவேட்டில் சட்ட தகவல், புள்ளிவிவர தகவல் என இருவேறு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காகவே பெறப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக பார்த்தால் பிறப்புப் பதிவேட்டில் இனி பெற்றோரின் ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகவரிப் பெட்டியில் மாநிலம், மாவட்டம், டவுன் அல்லது கிராமம், வார்டு எண், பின்கோடு ஆகியன சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *