செய்திகள்

பிறந்த 8 நாட்களே ஆன குழந்தை கொலை: பெற்றோர் கைது

Makkal Kural Official

வேலூர், செப். 6–

பிறந்த 8 நாட்களே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (20). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்ததாகக்கூறி பச்சிளம் பெண் குழந்தை உடலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டுக்கு பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை சரவணன் பச்சிளம் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு தெரியாமல் பின்வாசல் வழியாக குழந்தையின் பெற்றோர் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா முன்னிலையில், பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததாகவும், அதே போல உடல் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. குறிப்பாக வீட்டிற்கு அருகில் இருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ்செடி உடைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

மேலும் தலைமறைவானவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவான கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரான சேட்டு மற்றும் டயானாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *