செய்திகள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீடு: யூடியூபர் இர்பானுக்கு மருத்துவர்கள் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, அக். 21–

குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான ஃபாலோயர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர்.

யூடியூபர் இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். மேலும் பிரசவத்தின்போது தாயையும் குழந்தையையும் பிரிப்பதற்காக, தொப்புள் கொடி அறுக்கும்போது வீடியோ எடுத்த இர்பான தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

இந்நிலையில், யூடியூபர் இர்பான் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வீடியோ கேமராவை எடுத்து சென்றது மட்டுமின்றி குழந்தைக்கும் தாயுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை வெட்டியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *