சென்னை, ஜூன் 3–
மொரிஷியஸிலிருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை நடுவானில் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொரீஷியஸைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32) தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் தம்பதியர் கவலையில் இருந்துள்ளனர்.
பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மோனிஸ் குமார் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி மொரிஷியஸிலிருந்து சிகிச்சைக்காக விமானத்தில் மோனிஸ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னைக்கு பயணித்துள்ளார். அப்போது திடீரென பச்சிளம் குழந்தை நடுவானிலேயே விமானத்தில் உயிரிழந்துள்ளது. அதைப் பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர். இதைப் பார்த்த சக பயணிகளும் கண்கலங்கினர்.
இதனையடுத்து விமானம் தரையிறங்கிய நிலையில், தகவல் அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட பச்சிளம் குழந்தை விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()





