“டிசம்பர் இரண்டு நந்துவுக்கு பிறந்த நாள் ” என்று பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் காட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்களோ அத்தனை நண்பர்களும் டிசம்பர் இரண்டு அன்று பிறந்த நாள் கொண்டாடப் போகும் நந்துவுக்கு வாழ்த்துகள் என்று திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
நந்து மட்டும் இல்லாமல் அந்தத் தேதியில் யார் யார் பிறந்தார்களோ அத்தனை பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்து, அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து என்று சிலர் நண்பர்களுக்கு முன்னாடியே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எதற்கு முன்னால் வாழ்த்துச் சொல்லவேண்டும். நாம் பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்வதுதான் நியாயம்” என்று சிலர் அமைதியாக இருந்தார்கள். இது அத்தனையும் நந்துவின் மனைவி மீனா பார்த்துக் கொண்டே இருந்தாள். இத்தனை நண்பர்களைப் பழகி வைத்திருக்கிறார். எத்தனை பிறந்தநாள் வாழ்த்துக்கள் வருகின்றன. உறவினர்களுடன் ஒட்டாமல் இருக்கும் இந்த மனிதன் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு சரியாக இருந்திருக்கிறாரே?” என்று மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள், மீனா. தன் மகன் கார்க்கியிடமும் இதைக் காட்டினாள்.
“பாத்தியா உங்க அப்பா எவ்வளவு நல்ல பேர சம்பாதித்து இருக்கிறார். நாளைக்கு நீயும் அப்படித்தான் வரணும். எத்தனை நண்பர்கள் எவ்வளவு பேரு வாழ்த்து சொல்றாங்க. இதிலிருந்து தெரியுது உங்க அப்பா நல்லா வாழ்ந்துட்டு இருந்தாருன்னு ” என்று மீனா மிகவும் சந்தோஷப்பட்டாள். அன்று சரியாக டிசம்பர் இரண்டு. சமூக வலைதளம் முழுவதும் நந்துவைப் பற்றிய பாராட்டுக்கள், பேச்சுக்கள் அவரின் செய்கைகள் என்று எல்லோரும் ஒவ்வொரு விதமாக எழுதினார்கள்; படம் வரைந்து இருந்தார்கள். அத்தனையும் பார்த்த மீனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. தன் கணவனிடம் ஓடினாள்.
“பாத்திங்களா உங்களுக்கு எவ்வளவு பாராட்டு வந்திருக்குன்னு. இவ்வளவு நண்பர்கள சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? எப்படிங்க நான் கூட உங்களை சிடுமூஞ்சின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இவ்வளவு பேர் வாழ்த்து சொல்றாங்கன்னா, கண்டிப்பா நீங்க நல்லவங்களா தான் இருந்திருக்கணும். நான் தான் உங்கள தவறா புரிஞ்சிட்டு எப்பவுமே சண்டை போட்டுட்டு இருந்திருக்கேன் போல.
” டேய் இங்க வா” என்று மகனை அருகில் அழைத்து ‘‘இத அப்பா கிட்ட சொல்லு” என்று சொல்ல
“சரி” என்றான் கார்க்கி.
“எத்தனை நண்பர்கள் இவ்வளவு வாழ்த்து சொல்றாங்க. எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்குங்க”
என்று நா தழுதழுக்க பேசினாள் மீனா. மேலும் அவளால் பேச முடியவில்லை.
” அம்மா அழாதம்மா “
என்று கார்க்கி சொல்ல மீனாவும் மகனும் இருவரும் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார்கள்.
” இப்படிப் பண்ணிட்டு போயிட்டீங்களே? நீங்க இறந்தது கூட தெரியாம இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா? சிவனேன்னு செத்து போயிட்டீங்களே “என்று மீனாவும் மகனும் கதறி அழுதார்கள்.
புகைப்படத்தில் சிரித்தபடி இருந்தார் நந்து.
டிசம்பர் இரண்டு பிறந்தநாள் என்று நந்துவுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் வந்து கொண்டே இருந்தன.