சிறுகதை

பிறந்தநாள் பரிசு – ராஜா செல்லமுத்து

வடிவேல் தன் மகனின் பிறந்த நாளுக்கு நண்பர்கள் சொந்தங்கள் சுற்றும் சூழ அத்தனை பேரையும் கூப்பிட்டு இருந்தான்.

அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிறந்த நாளைக்கு போய் வரலாம் என்று அத்தனை பேரும் முடிவெடுத்தார்கள். நிச்சயமாக விடுமுறை நாள் என்பதால் நிறைய பேர் வருவார்கள் என்று நினைத்திருந்த வடிவேல் அத்தனை பேருக்கும் உணவைத் தயார் செய்து வைத்திருந்தான்.

திசைகளிலிருந்து எல்லா மனிதர்களும் வந்து சேர்ந்தார்கள். ஆனால் வந்து சேர்ந்தவர்களுக்கு ஒரு கேள்வி எழுந்தது.

பிறந்த நாள், சுப காரியங்களை திருமண மண்டபம் அல்லது கேளிக்கை மண்டபங்களில் தான் எல்லோரும் கொண்டாடுவார்கள். வித்தியாசமாக இவர் ஒரு பள்ளியில் கொண்டாடுகிறாரே என்ன? இது ஒருவேளை மகன் படித்த பள்ளியாக இருக்கலாம். அல்லது வடிவேல் படித்த பள்ளியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உண்மையிலேயே நாம பிறந்தநாள் கொண்டாடும் இடத்துக்கு தான் வந்திருக்கிறாேமா? இல்ல அட்ரஸ் தப்பாயே வந்துடுமா என்று குழம்பிப் போயிருந்தார்கள் பிறந்தநாளுக்கு வந்தவர்கள். கொண்டு வந்த அழைப்பிதழை திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார்கள். போதாக்குறைக்கு அந்தப் பள்ளியில் இருந்த காவலாளியையும் ஒரு முறை கேட்டு வந்த இடம் சரிதான் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால் அந்த பள்ளியில் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். இங்க தான் உண்மையிலேயே பிறந்தநாள் கொண்டாடுறாங்களா? என்ற சந்தேகம் எழுந்தது. பிறந்தநாள் கொண்டாட்டம்னு இந்த பள்ளிக்கூடத்து அட்ரஸ் தான் போட்டு பத்திரிக்கை அடிச்சிருக்காரு. இது உண்மைதானா ? என்று வந்தவர்கள் மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொள்ள

ஆமா சார் உள்ள போங்க அங்கதான் எல்லாம் ஏற்பாடும் நடந்துகிட்டு இருக்கு என்று காவலாளி சொல்ல எதிர் திசையில் பிறந்தநாளுக்கு வந்தவர்களை வரவேற்பதற்கு பிளக்ஸ் வைத்திருந்தார்கள். உள்ளே வந்த அத்தனை பேரையும் வடிவேல் முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்தான்.

கேக் தயாராக இருந்தது. வடிவேலு மகனுக்கு பிறந்தநாள் பாடல் பாடி கேக் வெட்டினார்கள். அத்தனை பேருக்கும் சாப்பாடு வரவழைத்தபோது ,அந்த கொண்டாட்டத்தில் பள்ளியில் மராமத்து வேலைகள் செய்து கொண்டிருந்த ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

கேட்கலாமா? வேண்டாமா ? என்று பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது வடிவேலு நண்பர்களுக்குள் கேட்டு தான் பார்ப்போம் என்று நினைத்த ஒரு நண்பன் நேரடியாக கேட்டு விட்டான். ஊர்ல எவ்வளவோ சத்திரங்கள் இருக்கு. அங்க எல்லாம் வைக்காம இங்க பிறந்த நாளை வைத்திருக்கிறீங்களே ஏன்? என்று ஒருவன் கேட்டான்.

நண்பர்களே நான் உங்களுக்கு ஒன்னு சொல்லணும்னு ஆசைப்படுறேன். இது என் பையன் படிக்கிற பள்ளிக்கூடம். அவனுடைய பிறந்தநாள பயனுள்ளதா மாத்த நினைச்சேன். அதனாலதான் அவன் படிச்ச பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத் துவதாகவும் வெள்ளை அடிச்சு கொடுக்கணும் அப்படின்னு நினைச்சு அவனுடைய பிறந்தநாள் பரிசாக இதப் பண்றேன்.

தேவையில்லாம ஒரு மண்டபத்துக்கு கொடுக்கிற காச அவன் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு மராமத்து பணிக்கு செய்யச் சொன்னேன். அதான் பள்ளிக்கூடத்தில் பங்க்சன் நடக்கிது.எங்கேயோ கொண்டு போய் கொடுக்கிற காச இங்க கொடுத்ததுனால இப்போ பள்ளிக்கூடம் பளபளப்பாக மாறுது என்று சொன்னபோது

வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் பொட்டிலடித்தது போல் இருந்தது. நாமளும் நம்ம வீட்ல வர்ற பிறந்த நாளை இப்படி உபயோகமா பண்ணா நல்லா இருக்குமே ?என்று முடிவு எடுத்தான் ஒருவன்

அடுத்த மாதம் வடிவேலு நண்பன் ஒருவன் திருமண நாள் வரவிருந்தது . அதைச் சிறப்பாக கொண்டாடுவதற்கு அவர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த பள்ளிக்கூடத்துக்கு வேண்டிய மராமத்துப் பணிகளை ஏற்றுக் கொள்வதாக அந்தப் பிறந்தநாளிலேயே வாக்குறுதி கொடுத்தான்.அதே போல செய்து முடித்தான்.

இந்த உபயோகரமான வேலை சரிதான் என்று அங்கு வந்திருந்தவர்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். அன்று நடந்த வடிவேல் மகனின் பிறந்த நாள் எத்தனையோ மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *