புதுடெல்லி, நவ. 15–
பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பழங்குடியினர் பெருமை நாளின் இந்த புனிதமான வேளையில், நாட்டின் சுதந்திரப் போரட்ட வீரர் பிர்சா முண்டாவின் பங்களிப்பை ஒட்டுமொத்த தேசமும் மரியாதையுடன் நினைவு கூர்கிறது. ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டமும் தியாகமும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் மற்றும் ஊக்கமளிக்கும். அவருக்கு நூறு மடங்கு வணக்கங்கள் என மோடி கூறியுள்ளார்.
மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவான நாளையொட்டி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் இந்த நிலத்தின் வரலாறு தைரியம், போராட்டம் மற்றும் சுயமரியாதைகளால் நிரம்பியுள்ளது. இந்த நாளில் மண்ணின் மக்களுக்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார்.2000ம் ஆண்டு பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]()





