விரிந்து பரந்து கிடந்த அந்த மருத்துவமனையில் எண்ணற்ற நோயாளிகள் படுத்து கிடந்தார்கள். அவரவர் நோய்களுக்கு அவரவர் காரணம் என்று அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டார்கள். உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் என்றிருந்த அந்த மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள் சிலர் படுத்திருந்தார்கள் .சிலர் சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் மௌனமாக அழுது கொண்டிருந்தார்கள்.
” வெளியே போங்க டாக்டர் விசிட் வராங்க “
என்று ஒரு செவிலித்தாய் சொல்ல அங்கே அமர்ந்திருந்த உறவினர்கள் எல்லாம் வெளிநடப்பு செய்தார்கள். வேகவேகமாக வந்த மருத்துவர்கள் நோயாளிகளை ஒரு சேர பார்த்துவிட்டு அவரவர் வைத்திருக்கும் நாேட்டுப் புத்தகங்களில் ஏதோ எழுதி வைத்துச் சென்றார்கள்.
” இவங்களுக்கு இன்ஜெக்சன் போடுங்க .இவங்களுக்கு டேப்லட் கொடுங்க. இவங்களுக்கு எண்டோஸ்கோபி பண்ணுங்க. இவங்களுக்கு இசிஜி எடுங்க ” என்று சொல்லிவிட்டு சென்றார்கள் மருத்துவர்கள் .
பரந்து கிடந்த அந்தப் படுக்கை அறையில் கடைசிப் படுக்கையில் ஏதோ ஒருவர் முணங்கிக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து பார்த்த பரமுக்கு அவர் யார் இவரும் மருத்துவரா ? அந்த நோயாளிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? என்று ஆவலாகப் பார்த்தான் . ஏற்கனவே டாக்டர்கள் வந்து மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்துட்டு போறாங்க. இவர் என்ன செய்ய காத்திருக்கிறார்?
என்று பயந்த பரமு முணங்கிக் கொண்டிருப்பவரைப் பார்த்து ஓரமாக பதுங்கி படுத்தான். முணங்கிக் கொண்டிருந்தவர் ஒவ்வொரு படுக்கை அறையாக நின்று பேசிக் கொண்டு வந்தார். ஒரு வகையில் மருத்துவர் தான் என்று நினைத்துக் கொண்டான் பரமு
” சரி ஆனதாச்சு என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்”
என்று திரும்பிப் படுத்து படம் பார்த்துக் கொண்டிருந்தான். உங்களுக்கு நான் பிரேயர் பண்ணப் போறேன்?
என்ற போது என்னது பிரேயரா?
என்று ஆச்சரியமாக கேட்டான் பரமு அவன் உடன் வந்த கெஸ்ட்டுக்கு வியப்பாக இருந்தது.
” எதுக்கு இந்தப் பிரேயர் ? “
என்று கேட்டபோது
‘ கடவுள் உங்களுக்கு நல்லது சொல்ல எங்களை அனுப்பி உள்ளார் .உங்களுக்கு நான் பிரேயர் பண்ணலாமா? “
என்று அனுமதி கேட்டார் அந்த நபர்
” சரி பண்ணுங்க “
என்று சொன்னதும் அந்தப் பிரேயர் செய்யும் நபர்
” உங்களுக்கு எதிரிகள் யாரும் இருக்காங்களா?
என்று கேட்க
” இல்லை ” என்று தலை ஆட்டினான் பரமு.
” நீங்க யாரையாவது திட்டி இருக்கிறீர்களா?’’
என்று கேட்க அதற்கும் இல்லை என்ற தலையாட்டினான்.
” அப்படி நீங்க யாரையாவது திட்டி இருந்தாலும் சபித்து இருந்தாலும் அவர்களை வெறுத்து இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து விடுங்கள். அப்படி நீங்கள் செய்தால் உங்கள் பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் “
என்றார் அந்த பிரேயர் செய்பவர். சிறிது நேரம் அவருக்கு அந்த அவகாசத்தை கொடுத்து
” நீங்க நான் சொன்னது மாதிரி செஞ்சீங்களா ? என்று சொல்ல
பண்ணிட்டேன் என்றார்.
“சரி இப்போ நான் சொல்லச் சொல்ல சொல்லுங்க” என்ற போது அவர் சில வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல பரமுவும் சொல்லிக் கொண்டிருந்தான்.
பிரேயர் செய்யுங்கள் என்று சொன்ன வார்த்தைகள் எல்லாம் நம்பிக்கையாகவும் உண்மையாகவும் இருந்தன. நீங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க; உங்களுக்கு நிச்சயமா குணமாகும்; கடவுள் உங்களோடு இருப்பார்”
என்று சொல்லிச் சென்றார் அந்த பிரேயர் செய்பவர்.
பரமுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இதற்கு முன்னால் நமக்கு மருத்துவர் வந்தார். மாத்திரை இன்ஜெக்சன் கொடுத்தார் . சரி இவர் யார் எதற்காக பிரேயர் செய்கிறார்? இவர்களுக்கும் இந்த நோய்க்கு என்ன சம்பந்தம்?
என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தபோது பரமுவின் தலையில் கை வைத்து
” நீங்க நல்லா இருப்பீங்க. இன்னும் கொஞ்ச நாளில் இந்த மருத்துவமனையை விட்டுட்டு போயிருவீங்க”
என்று சொல்லி அடுத்து இருக்கைக்கு போன அந்த நபர் பிரேயர் செய்யலாமா? என்றார்.
“அவர் இல்லை; நான் மாற்று மதத்தவன் .எனக்கு இந்த பிரேயர் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றார்.
‘” ஆனால் கடவுள் உங்களை பார்ப்பார். நீங்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். கடவுள் உங்களை பார்க்கிறார் “
என்று சொன்னவர் அடுத்து படுக்கைக்குப் போனார். அந்த இரவு அந்த மருத்துவமனையின் எதிரே நிறைய நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
எதற்காக இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டபோது
“இலவசமா உணவு கொடுக்கிறாங்க. அதுக்கு தான் நின்னுகிட்டு இருக்காங்க” என்று ஒருவர் சொல்ல
“ஓ சரி இதுவும் ஒரு வகையில் சேவை தான் “
என்று நினைத்தான். சற்று நேரத்திற்கு முன்னால் நான் வேற்று மதத்தவன் எங்களுக்கு உங்கள் பெயர் வேண்டாம் என்று சொன்ன அந்த நபரும் அங்கே நின்று கொண்டிருந்தார் . எதற்காக இவர் நிற்கிறார் ?ஒருவேளை சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லையோ என்னவோ?
என்று நினைத்த பரமு அவரைத் தூர நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
வேகமாக வந்த ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்மணி குழுமி இருந்த கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு உணவு பொட்டலத்தை வழங்கிக் கொண்டிருந்தார் .
வேற்று மதத்தவன் என்று சொல்லிய அந்த நபரும் ஒரு உணவுப் பொட்டலம் வாங்கினார். பரமு தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். தான் வேற்று மதத்தவன் என்று சொல்லிய அந்த நபருக்கு பிரேயர் செய்யச் சொன்ன அந்த நபர் தான் உணவு வழங்கிக் கொண்டிருந்தார் . அது வேற்று மதத்தவன் என்று சொன்னவருக்குத் தெரியாது.
இதைப் பார்த்து சிரிப்பதா? இல்லை அழுவதா ? என்று தெரியாமல் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பரமு.
#சிறுகதை