சிறுகதை

பிரேம்ஜிக்கு இறுதிச் சடங்கு (துரை. சக்திவேல் )

டேய்… பாபு உனக்கு என்ன பைத்தியம் எதுவும் பிடிச்சு இருக்கா… முட்டாள் தனமான காரியம் எதுவும் செய்யாதே….
உங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க….
அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் போது இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்யக்கூடாது. தயவு செய்து நான் சொல்வதை கேளு என்று மணி அதட்டலாகக் கூறினார்.
அடப் போடா… அதுதெல்லாம் ஒண்ணும் கிடையாது…. நான் தான் எல்லாம் செய்யப் போறேன்….
எங்க அம்மா, அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாங்க. அப்படி எதுவும் சொன்னா நான் சமாளிச்சுக்கிறேன்..
அவருக்குன்னு நம்மை விட்டா யாரும் இல்லை என்று கூறிய பாபு தான் நினைத்ததை செய்யத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பாபுவிடம் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டார்.
அதில் பாபு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போதும் மணி விடுவதாக இல்லை.
பாபு நான் சொல்வதை கேளு. இதெல்லாம் நீ செய்யக்கூடாது என்று கூறினார்.
ஆனாலும் பாபு கேட்பதாக இல்லை. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டார்.
பாபுவும் மணியும் ராமன் என்பவருக்கு சொந்தமான ‘‘சண்முகம் டூரீஸ்டர்’’ என்ற தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அந்த நிறுவனத்தில் கார் மற்றும் வேன்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
அங்கு டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள்.
அந்த அலுவலகத்தின் காவலராக பணிபுரிபவர் பகதூர் பிரேம் ஜி.
30 வருடங்களுக்கு முன்பு நேபாளத்தை சேர்ந்த பகதூர் பிரேம் ஜி தனது 25வது வயதில் அங்கிருந்து தனது நண்பர்களுடன் தமிழகத்திற்கு வந்தார்.
அவருடைய நண்பர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தனர்.
பிரேம்ஜி ‘‘சண்முகம் டூரீஸ்டர்’’ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.
காவலாளியாக வேலைக்கு சேர்ந்தாலும் எல்லாவிதமான வேலைகளையும் மிகவும் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் செய்தான் பிரேம்ஜி.
அவன் செய்யும் வேலை உரிமையாளர் ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அதனால் தனது நிறுவனத்தின் ஒரு பகுதியில் பிரேம்ஜி தங்கிக் கொள்ள அனுமதி அளித்தார் உரிமையாளர் ராமன்.
அங்கேயே சமைத்து சாப்பிட்ட பிரேம்ஜி இரவு, பகல் பாராமல் நேர்மையாகயும் விசுவாசமாகவும் வேலை பார்த்தான்.
டிராவல்ஸ் நிறுவனத்தின் காவலாளியாக வாசலில் நிற்கும் பிரேம்ஜி அங்கு வரும், உரிமையாளர், வேலை ஆட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அன்புடன் ‘‘நமஸ்தே சாப்’’ என்று சல்யூட் அடித்து வரவேற்பார்.
நேபாள மொழி மட்டும் தெரிந்த பிரேம்ஜி காலப் போக்கில் தமிழையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சம் தமிழில் பேசத் தெரிந்து கொண்டார்.
அந்த நிறுவனத்தில் ஏராளமான டிரைவர்கள் வேலைக்கு வருவதும் பின்னர் வேலையை விட்டு செல்வதுமாக இருந்தனர்.
பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமலும் வேறு எங்கும் வேலைக்கு செல்லாமலும் 30 வருடமாக இங்கேயே தொடர்ந்து வேலை செய்து வந்தார்.
திரும்ப நோபாளத்திற்கு செல்லாமலும் அங்குள்ள தனது உறவுகளையும் அவர் துறந்து விட்டார்.
அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பிரேம்ஜி யாருக்காவது அவசரம் என்றால் உதவக்கூடிய மனபான்மை கொண்டவர்.
அதே போல் தினமும் காலை தனக்கு தேவையான உணவு சமைக்கும் போது, தனக்கு மட்டும் சமைக்காமல் மூன்று, நான்கு பேர் சாப்பிடும் அளவுக்கு சமையல் செய்து, அங்கு வேலை பார்க்கும் டிரைவர்களுக்கும் வேலையாட்களுக்கும் வயிறார சாப்பாடு போடுவார்.
பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் பிரேம்ஜி.
அதனால் அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் பிரேம்ஜி என்றால் மிகவும் பிடிக்கும்.
பிரேம்ஜியுடன் நோபாளத்திலிருந்து வந்த நண்பர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வெளியூர் சென்றனர். அதனால் அவர்களுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் பிரேம்ஜிமட்டும் தான் வேலை பார்க்கும் நிறுவனமே தனக்கு சொந்தம் என்றும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே தன உறவினர்கள் என்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.
அதே போல் அங்கு வேலை பார்க்கும் பலரும் பிரேம்ஜிக்கு தீபாவளி பொங்கல் பண்டிகை காலங்களில் இனிப்பு, பலகாரங்கள் , சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுப்பார்கள். பிரேம்ஜியை தங்களது குடும்ப உறுப்பினர் போல் நினைத்துக் கொண்டு தங்களது சுக, துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வர்.
பிரேம்ஜியும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்து கொடுப்பார்.
சண்முகம் டிராஸ்போர்ட் நிறுவனத்தில் மணியும் பாபுவும் வேலைக்கு சேர்ந்து 10 வருடங்களாக வேலை பார்த்து வந்தனர்.
அதனால் அவர்களுக்கும் பிரேம்ஜியை ரொம்ப பிடிக்கும்.
அவர்களும் பிரேம்ஜியை தங்களது குடும்ப உறுப்பினர் போல் பாவித்து, வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் பிரேம்ஜியை அழைத்துக் கொண்டு செல்வதும் உண்டு.
இரவில் மது அருந்தும் பழக்கம் கொண்ட பிரேம்ஜிக்கு வயது ஆக ஆக உடல்நிலை சிறிது மோசமானது.
அவருக்கு உடல் நிலையில் சரியில்லாத போது அங்கு வேலை பார்ப்பவர்களே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.
அவ்வப்போது வைத்தியம் பார்த்து அதனைச் சரி செய்து வந்தார் பிரேம்ஜி.
உறவுகள் யாரும் இல்லாத பிரேம்ஜியை சொந்த நாட்டுக்கே திரும்ப செல்லும்படி பலர் கூறினர்.
ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
அனாதையாக நான் இங்கு வந்த போது எனக்கு ஆதரவு தந்தது இந்த நிறுவனம். அதனால் செத்தாலும் இங்கேயே தான் சாவேன் என்று கூறிவிட்டார்.
அதன் பின் பிரேம்ஜி தனது அலுவலகத்திற்கு அருகில் தனியாக வீடு எடுத்து அங்கு ஓய்வு எடுத்து கொள்ள ஆரம்ஙபித்தார்.
உடல்நிலை கொஞ்சம் மோசமான பிரேம்ஜி ஒரு நாள் நள்ளிரவு தான் தங்கியிருந்த வீட்டில் காலமானார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலைக்கு வராததால் பாபுவும் மணியும் பிரேம்ஜியை அவர் தங்கியிருந்த வீட்டுக்கு தேடிச் சென்றனர்.
அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. பலமுறை கத்தியும் கதவு திறக்கவில்லை.
உடனே பாபுவும் மணியும் அவர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரேம்ஜி இறந்து கிடந்தார்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிரேம்ஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் இயற்கை மரணம் அடைந்தது தெரியவந்தது.
அவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவர்களது உறவினர்கள் யார் என்று விசாரித்தனர்.
ஆனால் அவருக்கு என்று இங்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதுதெரியவந்தது. அவர் வேலை பார்க்கும் சண்முகம் டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் அதில் வேலை பார்க்கும் ஊழியர்களுமே உறவினர்கள் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து யாராவது ஒருவர் உடலை வாங்கிக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் அனாதை பிணமாக நாங்களே இறுதி சடங்கு செய்து விடுகிறோம் என்று காவலர்கள் கூறினர்.
ஆனால் அவரது நிறுவன உரிமையாளர் அதை ஒத்துக் கொள்ளவில்லை; நாங்களே அவரது உடலை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறி உடலை வாங்கிக் கொண்டு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
அவரது உடல் அந்த நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பிரேம்ஜியின் உடலை பார்த்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஒவ்வொருவரும் பிரேம்ஜி தங்களுக்கு செய்த உதவியையும் தங்களுடன் அவர் பழகிய விதத்தையும் தங்கள் மனதிற்கு நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.
அந்த நிறுவன ஊழியர்கள் மட்டுமல்ல; அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஏனென்றால் பிரேம்ஜி அந்தப் பகுதியில் உள்ள அனைவரிடமும் அன்புடன் பழகியவர்.
இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஏராளமானோர் பிரேம்ஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தனக்கென்று குடும்பம் மற்றும் ரத்த சம்பந்தமான உறவுகள் யாருமே இல்லாத நேபாள நாட்டை சேர்ந்த ஒரு காவலாளிக்கா இவ்வளவு உறவுகள் என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு அந்த இறுதி ஊர்வலத்தில் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதி சடங்கும் நடக்கும் இடத்திற்கு உடல் வந்தவுடன் இறுதிச் சடங்கு யார் செய்வது என்று அனைவரும் யோசித்தனர்.
தாய், தந்தை உயிருடன் இருப்பவர்கள் மற்றவருக்கு இறுதிச் சடங்கு செய்ய யோசிக்கத்தான் செய்வார்கள். இது மதம் சார்ந்த சடங்கு. அதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் கொஞ்சம் தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால் பாபு தானே முன் வந்து பிரேம்ஜியின் உடலுக்கு நானே இறுதி சடங்கு செய்வதாகக் கூறினார்.
பாபுவின் அப்பா, அம்மா உயிருடன் நலமாக இருப்பதால் அவர் அந்த இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று மணி கூறினார்.
ஆனால் பாபு கேட்பதாக இல்லை.
தனது தந்தைக்கு நிகராகவே நான் பிரேம்ஜியை பார்த்தேன். யாரும் இல்லாத அனாதைபோல் அவருக்கு இறுதி சடங்கு செய்யாமல் விடுவதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய பாபு தானே இறுதி சடங்கு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்திட்டார்.
அதன் பின் ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து பிரேம்ஜிக்கு இறுதிச் சடங்கு செய்தார் பாபு.
பாபுவின் தாய், தந்தை மற்றும் மனைவி அவரது செயலுக்கு எந்தவித தடையும் சொல்லாமல் அவரைப் பாராட்டினர்.
பாபுவின் செயலை அனைவரும் பாராட்டினர்.
பிரேம்ஜியின் உருவப்படத்தை அவர் பணிபுரிந்த அதே காவல் பணியறையில் திறந்து வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்திவிட்டார்கள்.
பிரேம்ஜி இறந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன.
இப்போதும் அவர் காவல் பணியாற்றிய அதே அறையில் அவர் உருவப்படம் புன்னகையுடன் காவல் பணிபுரிகின்றது.
பிரேம்ஜியின் புன்னகை சாதி மத இன தேச எல்லைகளைக் கடந்து அன்பும் பண்பும் ஓயாத உழைப்பு மட்டுமே உயர்வானது என்பதைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *