செய்திகள்

பிரேமானந்தா, நித்யானந்தா போல் போலி சாமியார்கள் வரிசையில் மோடி

-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை, மே 23-

தன்னை கடவுள் அவதாரம் என்று கூறிக் கொண்டதன் மூலம், போலி சாமியார்கள் பிரேமானந்தா, நித்யானந்தா வரிசையில் மோடியும் இணைந்து கொண்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக தாக்கி கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பா. ராமச்சந்திரன் நினைவு நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு உளறல்களை தேர்தல்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அண்மையில் நான் சாதாரணமானவன் இல்லை; கடவுள் அவதாரம் என்று மோடி பேசியிருக்கிறார். இந்திய மக்களை மடையர்கள் என்று கருதிக் கொண்டு, எது வேண்டுமானாலும் பேசலாம், அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளையடிக்கலாம் என்று மோடி கருதியுள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததன் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு மோடிக்கு சென்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே 5 ஜி ஏலம் மூலம் ரூ. 5 லட்சம் கோடியை கொள்ளை அடித்து, சரக்கு ரயிலில் ஏற்றி செல்லும் அளவுக்கு மோடி கும்பல் கொள்ளை அடித்துள்ளது.

போலி சாமியார் வரிசையில் மோடி

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் 400 இடங்களை வெல்வோம் என்பது தொடங்கி இப்பொழுது நானே கடவுள் என்பது வரை உளறல்களை நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் போலி சாமியார்கள் பிரேமானந்தா, நித்தியானந்தா வரிசையில் மோடியும் இணைந்து கொண்டார் என்று தான் கூற வேண்டும். தோல்வி பயம் மோடியின் கண்களில் தெரிவதால், உளறல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

தமிழர்களை இழிவுபடுத்தும் மோடி

மோடி தமிழர்களை எப்போதும் அவமானப்படுத்துவதில் குறியாக இருந்திருக்கிறார். வேட்டி கட்டிக் கொண்டால் தமிழர்களை ஏமாற்றலாம், திருக்குறள் சொன்னால் ஏமாற்றலாம், தமிழைப் பேசி ஏமாற்றலாம் என்று மோடி கருதுகிறார். ஆனால் ஒடிசாவில் சென்று தமிழர்களை திருடர்கள் என்று மோடி பேசுகிறார். எடப்பாடி ஆட்சி காலத்தில் சீன அதிபர் தமிழ்நாட்டுக்கு வந்த போது, 3 நாட்களும் மோடி சீன அதிபருடன் இருந்தார். ஆனால் மாநிலத்தின் முதல் குடிமகனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சீன அதிபருக்கு அறிமுகம் செய்து கூட வைக்கவில்லை.

தமிழர்களை எப்பொழுதுமே கேவலமாகவே அவர் எண்ணி இருந்தார் என்பதற்காக இதை இப்போது நான் சுட்டிக்காட்டுகிறேன். செம்மொழியான தமிழ் மொழிக்கு பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியையும் சமஸ்கிருதத்திற்கு கொடுத்த நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, தமிழரையும் தமிழையும் எப்படி கேவலமாக மோடி எண்ணுகிறார் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். இப்போது தமிழர்களை திருடர்கள் என்று மோடி கூறினால், நாம் அவரை என்னவென்று கூறுவது. அவர் ஒரு பிரதமராக இருக்க தகுதியானவர் தானா? உலக நாடுகள் இந்தியாவை மிகவும் கேவலமாக என்னும் அளவுக்கு மோடியின் தேர்தல் பிரச்சாரம் இருந்து வருகிறது.

மோடி தமிழர்களை திருடர்கள் என்று கூறிய 7 மணி நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக மோடிக்கு கண்டனங்களை தெரிவித்தார். அதற்காக அவரை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். தமிழர்களை சீண்டினால் என்ன நடக்கும் என்று சேரன் செங்குட்டுவன் காலத்திலேயே தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். எனவே மோடி தமிழர்களைப் பற்றி பேசும் போது, கவனமாக இருக்க வேண்டும். உளறல்களை நிறுத்திவிட்டு வாயை மூடிக்கொண்டு இருப்பது அவருக்கு நல்லது மோடியின் முகத்தில் நிம்மதி இல்லை என்பது தெரிகிறது. அதற்காக தமிழர்களை இழிவாக பேசினால், தமிழர்கள் பொங்கினால் என்ன நடக்கும் என்பதை அவர் தெரிந்து கொள்வது நல்லது.

நல்லாட்சி தரும் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி நடக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம் என்றால், நல்லாட்சி நடக்கிறது என்று பொருள். நல்லாட்சி அனைத்தும் காமராஜர் ஆட்சி என்று நாங்கள் கருதுகிறோம். காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம், அணைகள் கட்டுவது என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள், காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் என ஏராளமான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே இதனை ஸ்டாலின் ஆட்சி என்று சொன்னாலும் காமராஜர் ஆட்சி என்று சொன்னாலும் ஒன்றே தான். நல்லாட்சி என்பதன் பொருள் தான் அது.

தமிழ்நாடு இந்தியாவுக்கே எப்பொழுதும் வழிகாட்டி கொண்டு தான் இருக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்திலும் சரி, இப்பொழுது ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் சரி. இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே வழிகாட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதனால்தான் ஸ்டாலின் ஆட்சியை நாங்கள் காமராஜர் ஆட்சி என்று கூறுகிறோம். காலை உணவுத் திட்டத்தை இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, கனடா போன்ற நாடுகளே பாராட்டி ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறது என்பதால், இதனை காமராசர் ஆட்சி என்று கூறுகிறோம் என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

#MODI #NARENDRAMODI #PM #BJP #Congress #Rahulgandhi

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *