நாடும் நடப்பும்

பிரேசில் தலைமையில் பிரிக்ஸ் வங்கி


ஆர். முத்துக்குமார்


புதிய வளர்ச்சி வங்கியின் தலைவராக பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசெப் பணி அமர்த்தப்பட்டுள்ளார். அடுத்த மாதம் பிரேசில் ஜனாதிபதி லூலாடா சில்வா சீனா பயணத்தை மேற்கொள்ளும் போது புதிய பிரிக்ஸ் வங்கியின் தலைவராக டில்மா பதவி ஏற்றுக்கொள்வார்.

பிரிக்ஸ் வங்கி என்று துவங்கப்பட்ட இவ்வமைப்பு 2014–ல் புதிய மேம்பாட்டு வங்கி என பெயர் மாற்றம் செய்து கொண்டது.

அச்சமயத்தில் பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியை அலங்கரித்தவர் டில்மா ஆவார். அப்போதே ரஷ்ய பிரதமர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜீமா ஆகியோருடன் மிக நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொண்டார்.

உள்நாட்டு தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் இவரது வளர்ச்சிகள் பாதித்தது.

ஆரம்பம் முதலே பிரேசில் வளர்ந்த பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. ஆகவே புதிய வளர்ச்சி வங்கியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அறிவார். மேலும் அப்படிப்பட்ட செயல்திறன் கொண்ட வங்கியாகவே செயல்பட வைக்கும் நல்ல திறமைசாலியும் ஆவார்.

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் ஷாங்காயில் இருப்பதை பார்க்கும் போது சீனாவின் ஆதிக்க அரசியல் புரிகிறது.

உலக வங்கிக்கு எதிராய் பணியாற்றிட களம் இறங்கி இருக்கும் பிரிக்ஸ் வங்கி என்பது இன்றுள்ள நிலை. அதில் இந்தியாவும் சீனாவும் எதிரும் புதிருமாய் தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரேசிலால் உள்நாட்டு அரசியல் வீழ்ச்சிகளை மறந்து சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

எரிசக்தி, உள்கட்டமைப்பு, புனரமைப்பு மற்றும் மேம்பாடுகள் பற்றி எல்லாம் ஆலோசிக்கவும் கலாச்சார பரிமாற்றங்கள் பற்றிய சிந்தனையுடன் சுற்றுலா வளர்ச்சிக்கான கட்டுமானத்தையும் உருவாக்க இவ்வங்கியின் சேவை இருக்கவேண்டும்.

இந்த வங்கியினால் நமக்கு ஏதேனும் பயன் உண்டா? 2020–ல் டெல்லி – மீரட் அதிவேக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் தந்து உதவியதை மறக்கவா முடியும்?

கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது இவ்வங்கி பல சிறு வளரும் நாடுகளுக்கு போதிய நிதி உதவிகள், மருத்துவ வசதிகளையும் தந்து உதவியது அல்லவா?

ஆங்கில மொழித்திறன், மனிதவள திறன் நிரம்பி இருந்தும் சீனா அவ்வங்கி தங்கள் நாட்டில் துவங்க பல்முனை அழுத்தத்தை தந்து சாதித்துக் கொண்டது.

இன்றோ அவ்வங்கி சீனாவில் இருப்பதுடன், பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, சீன தலைவர்கள் மிகச் சிறந்த நிர்வாகிகள் என நம்புகிறார்கள் அவர்களது செயல்திட்டங்களை வரவேற்கிறார்கள்.

அந்த வகையில் தற்போதைய புதிய வளர்ச்சி வங்கியின் தலைமை சீனாவின் கைப்பாவையாக மாறிவிடுமோ? என்ற அச்சக்கேள்வி எழுகிறது.

தற்போது ஜி20 நாடுகளின் தலைமை இந்தியா வசம் இருப்பதால் அதுவும் சாதக பாதகங்கள் கொண்டு இருந்தாலும் பல வளரும் பொருளாதாரங்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்ட பல நல்ல திட்டங்களை எதிர்பார்க்கின்றனர்.

மொத்தத்தில் இந்தியாவின் பிரிக்ஸ், ஜி20 பங்களிப்புகளால் சிறு பொருளாதாரங்கள் நம்பிக்கை பெருகுகிறது, பிரிக்ஸ் வங்கியின் தலைமை பிரேசிலிடம் இருந்தாலும் சீனாவிற்கு முழு சாதகமானதாக மாறி செயல்படாது; இந்தியாவும் செயல்பட விடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *