முழு தகவல்

பிரிவினையால் உருவான 2 லட்சம் அகதிகளுக்காக முதலும் கடைசியுமான காந்தியின் வானொலி உரை!

தன் சொற்களால் இந்திய மக்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டம் நடத்திய தேசத்தந்தை காந்தி- அகில இந்திய வானொலியில் ஒரே ஒருமுறை தான் உரையாற்றியிருக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

காந்தியின் உரைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், 1947-ம் ஆண்டின் தீபாவளி நாளான நவம்பர் 12 ந்தேதி தேசத்தந்தை காந்தியார் ஆற்றிய உரைதான் முதலும் கடைசியுமாக, அவர் அகில இந்திய வானொலியில் ஆற்றிய நேரடி உரை. அதன்படி, அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காந்தி தன்னுடைய செயலாளர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் உள்ளிட்ட குழுவினருடன் அகில இந்திய வானொலிக்கு வருகை தந்தார்.

வானொலியில் காந்தி உரை

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளில் சுமார் 2 லட்சம் பேர், அரியானாவின் குருக்சேத்ரத்தில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காந்தி அந்த மக்களைச் சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் தடைபட்டது. இந்தப் பின்னணியில்தான், அகில இந்திய வானொலியின் மூலம் காந்தி அந்த மக்களிடம் உரையாற்றுவது என்று முடிவானது.

காந்தி உரையாற்றுவதற்காக, வானொலி நிலைய அரங்கம், பிர்லா இல்லத்தில் காந்தியின் பிரார்த்தனைக் கூடத்தைப் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்தியின் வருகை குறித்து குருக்‌சேத்ர முகாமில் முந்தைய நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்த அந்த மக்கள், காந்தியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், காந்தியின் வருகை தடைப்பட்டதை அறிந்து அவர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால், காந்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார் என்பதை அறிந்து அவர்கள் ஆறுதல் அடைந்தனர். முகாமின் மையத்தில், ஒலிபெருக்கி பொறுத்தப்பட்ட மிகப் பெரிய மர்ஃபி ரேடியோ ஒன்று நிறுவப்பட்டது. முகாமில் காந்தியின் இருப்பை உணர்த்தும் வகையில், நாற்காலி ஒன்றில் காந்தியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

பொறுமையுடன் எதிர்கொள்வோம்

கடவுளின் அற்புத சக்தியான ‘ஆற்றலை நான் காண்கிறேன்” என்று காந்தியார் வானொலி அரங்கில் நுழைந்தபோது வானொலி ஊடகம் பற்றி கூறியுள்ளார். மதியம் 3:30 மணியளவில் தனது உரையைத் தொடங்கிய காந்தியார், “பாதிக்கப்பட்ட என் சகோதர சகோதரிகளே, என்னுடைய இந்த உரையை, நீங்கள் தனியாக கேட்கிறீர்களா? குழுவாக கேட்கிறீர்களா? உங்களில் யாரெல்லாம் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை…என்று தொடங்கினார்.

உங்களுடன் நேரில் சந்தித்து உரையாட முடியாமல், இந்த ஊடகம் (வானொலி) வழியாக நான் உங்களை தொடர்பு கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறிய காந்தி, உங்களுக்கு ஒரு பெரிய பேரழிவு வந்துவிட்டது என்பதை நான் அறிவேன். பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அதனை உணர்வதும், அவர்களின் துயரங்களை நீக்குவதும் தனது வாழ்க்கையின் பணி. உங்கள் துயரங்கள் அனைத்தும் விரைவில் தீரும். உங்கள் அனைவருக்கும் பொறுமை இருக்கிறது. அதிகபட்ச துணிவு மற்றும் பொறுமையுடன் இந்தத் துயரை எதிர்கொள்ள வேண்டும்” என்று அந்த மக்களிடம் வேண்டிக்கொண்ட காந்தியாரின் உரை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

காந்தியின் வியப்பு

இதுவே அகில இந்திய வானொலியின் முதலும் கடைசியுமாக காந்தியின் நேரடி உரையாக வரலாற்றில் பதிவானது. விடுதலைக்கு பின் காந்தியினுடைய உரையினை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்ப தொடங்கிய காலம். காந்தி அந்த உரையை கேட்பதற்கு எந்த முயற்சியும் செய்யவே இல்லை. ஒருமுறை நேருவின் செயலாளர் எம்.ஓ.மத்தாய் இந்திரா காந்தியோடு காந்தியை சந்திக்க வந்தார். அப்போது அவர் ஒரு டிரான்சிஸ்டரை கையில் வைத்துக்கொண்டு அதை காந்தியிடம் காட்டினார். அதன் பொத்தானை அழுத்தி அதில் ஒலிபரப்பாகி கொண்டிருந்த காந்தியின் உரையை போட்டு காட்டினார். “ஓகோ… இது என்னுடைய குரலா” என காந்தி அவரது உரையை முதன் முதலாக டிரான்சிஸ்டரில் கேட்டு வியப்பு தெரிவித்துள்ளார்.

காந்தி ஒருமுறை மட்டுமே அகில இந்திய வானொலியில் நேரடியாக உரையாற்றி இருந்தாலும், பிர்லா வீட்டில் பிரார்த்தனைக்குப் பிறகான காந்தியின் உரைகள், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம் வரை, வானொலி தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது. 147 உரைகள் அடங்கிய காந்தியின் உரைகள் என்ற தனிப் பிரிவாக, அகில இந்திய வானொலி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேசத்தந்தை காந்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றியதன் 50-ம் ஆண்டு, 1997-ல் கொண்டாடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டு நவம்பர் 12 ந்தேதிதான் இது பொது சேவை ஒலிபரப்பு தினம் என்று அறிவிக்கப்பட்டு, அகில இந்திய வானொலி தேசிய ஒலிபரப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பொது சேவை ஒலிபரப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.