சென்னை, நவ. 18–
மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத் தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட காது, மூக்கு, தொண்டை உயர்நிலை நிலையத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
400வது குழந்தைக்கு காக்லியர் இம்ப்லாண்ட் கருவியை பொறுத்தி, செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:–
1927ம் ஆண்டு சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை துறை சென்னை மேயர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த டாக்டர் செரியன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1972-ல் ஒரு நிறுவனமாக இந்த துறை தரம் உயர்த்தப்பட்டு, 50 ஆண்டுகள் கடந்து பொன் விழா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
400வது காக்லியர் இம்ப்லாண்ட்
அறுவை சிகிச்சை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, பிறவி காது கேளாதோருக்கான 400வது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. 2010ம் ஆண்டு முதன் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் பேச்சு மற்றும் கேட்டல் கல்லூரி தொடங்கப்பட்டது.
பெரா போன்ற செவித்திறனுக்கான அனைத்து உயர்நிலை பரிசோதனைகள், கணினிமயமாக்கப்பட்ட குரல் பகுப்பாய்வுக்கான பேச்சு ஆய்வகம், தலைச்சுற்றலுக்கான, தூக்கத்திற்கான ஆய்வகம் மற்றும் குறட்டைக்கான பாலிசோம்னோகிராபி, உணவு விழுங்குதல் கோளாறுகளைக் கண்டறிய எண்டோஸ்கோபிக் சோதனை, குரல்வளை மற்றும் குரல்வளையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நாரோ பேண்ட் இமேஜிங் , குரல்வளைக்கான நுண்ணோக்கிகள், எண்டோஸ்கோபிக் கேமரா, ஸ்ட்ரோபோஸ்கோபி, தூக்கம் மற்றும் குறட்டை திருத்த அறுவைச் சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட அறுவைச் சிகிச்சைகள் இங்கு செய்யப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இது வரை 5035 காக்லியர் இம்ப்லாண்ட் பயனாளிகள் ரூ.358.44 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனையடுத்து கால்பந்தாட்ட மாணவி பிரியா மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “மாணவி பிரியா விவகாரத்தில், உடனடியாக மருத்துவ விசாரணக்காக ஒரு குழு அமைத்தோம். குழுவினர் விசாரணை நடத்தி, மருத்துவர்களின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று அறிக்கை அளித்தனர். உடனடியாக சிகிச்சை அளித்த 2 டாக்டர்களும் தூத்துக்குடிக்கும், நெல்லைக்கும் இடமாற்றம் செய்தோம்.
அதோடு மட்டுமின்றி, அந்த குழந்தையை நானே மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து நீண்ட நேரம் உரையாடினேன். மாணவியின் பெற்றோரிடமும் பேசி கொண்டிருந்தேன். அப்போது மாணவிக்கு உடல்நலம் தேறியவுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தேன். அதேபோல், பெங்களூரிலிருந்து அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய பேட்டரி கால் வாங்கி கொடுப்பதாக நாங்களாகவே உறுதியளித்தோம். மருத்துவ துறையினருக்கும், குழந்தையின் காயங்கள் ஆறியவுடனே பேட்டரி கால்களை ஆர்டர் செய்ய வலியுறுத்திவிட்டு வந்தேன்.
அன்று இரவுதான் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் இடையிலான ரத்த ஓட்டம் முழுமையாக நின்றுவிட்டதன் விளைவாக பிரியா நம்மை விட்டு பிரிந்தார். தகவல் கிடைத்தவுடனே வந்து, மருத்துவமனையில் அந்த குழந்தையைப் பார்த்தேன். அவரது தந்தை உடற்கூறாய்வு வேண்டாம் என்று கூறினார். உடற்கூறாய்வு செய்தால்தான், மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தவறு செய்திருந்தால், அதை உறுதிப்படுத்த முடியும். எனவே உடற்கூறாய்வு செய்வது நல்லது என்று நான்தான் மாணவியின் தாய், தந்தை மற்றும் 3 சகோதரர்களையும் சமாதானப்படுத்தினேன்.
மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன், துறை தலைமை டாக்டர் முத்துக்குமார், நோடல் அலுவலர் பாரதி மோகன் மற்றும் உயர் மருத்துவ அலுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
––––––