சிறுகதை

பிரியா!…பிரியா! | முகில் தினகரன்

அந்த முன்னணி கொரியர் சர்வீஸ் ஆபீஸில் புக்கிங்கிற்காக வரும் தபால்களுக்கு ரசீது போட்டுக் கொடுக்கும் பணியிலிருக்கும் பிரியா பல இளைஞர்களின் கனவுக்கன்னி.

அப்படியொன்றும் பிரமாதமான அழகி இல்லைதான். மாநிறம்தான்….குள்ளமான உருவம்தான், சற்று வற்றலான தேகம்தான். ஆனாலும் அவளுக்கு ரசிகர் மன்றம் வைக்க ஒரு இளைஞர் கூட்டம் தயாராக இருக்கின்றது. அதற்கும் மேலாக அவளுக்கு கோயில் கட்ட இன்னொரு கூட்டம் இடம் தேடிக் கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம், தபால் கொண்டு வரும் கஸ்டமர்களிடம் அவள் பேசும் அந்த தொணிதான். அதில் கலந்திருப்பது காதலா? கவர்ச்சியா? விஸ்கியா? பிராண்டியா?..ம்ஹூம்…எதுவும் சொல்ல முடியாத ஈர்ப்புத்தனமான அந்த அன்புப் பேச்சுதான் அவளுடைய பிள்ஸ் பாயிண்ட்.

அவள்தான் அந்த நிறுவனத்திற்கு பிளஸ் பாயிண்ட். தபால் இல்லாவிட்டாலும் சும்மாவாவது அவளைப் பார்க்க…அவளிடம் பேச வரும் இளைஞர்களுக்கு ஒரு கிக்கான புன்னகையை கொடுத்தனுப்புவாள்.

மறுநாள் வரை அவர்கள் அந்தப் கிக் புன்னகையிலேயே மிதந்திருந்து விட்டு, அடுத்த நாள் மறுபடியும் வந்து நிற்பர்.

சில நேரங்களில் சில விடலைகள் அவளுக்கு லவ் லெட்டர் தருவதுண்டு. அதை வாங்கி அவர்கள் எதிரிலேயே படித்து விட்டு, ஏதோ கவிதையை வாசித்துப் பாராட்டுவது போல், “வாவ்…சூப்பர்டா!…அருமைடா!…நல்லா எழுதியிருக்கேடா!” என்பாள். ஆனால், இது வரையில் எவனுடைய காதல் வலையிலும் விழுந்ததில்லை.

அப்பேர்ப்பட்ட பிரியாவின் மனது, கடந்த இரண்டு மாதங்களாகவே ஒரு நபரின் மீது சாய்ந்து விட்டதுதான் அவளுக்கே ஆச்சரியம்.

அந்த நபர்… “திவாகர்”.

சிறிய கம்பெனியொன்றில் அட்டெண்டராக வேலை பார்க்கும் முப்பத்தியெட்டு வயதான அந்த திவாகர் மனைவியை இழந்தவன். தினமும் மாலையில் கம்பெனி தபால்களை கொரியரில் அனுப்ப அங்கே வருவான். கூடவே ஒரு எட்டு வயது சிறுமியையும் அழைத்து வருவான்.

ஒரு முறை வழக்கம் போல் தன் பாணியில் கலகலப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த பிரியாவிற்கு, அப்போதுதான் தெரிய வந்தது, அவன் மனைவியை இழந்தவன் என்பதும் அவன் உடன் வரும் சிறுமி அவனுடைய மகள் என்பதும்.

முதலில் அவன் மீது இரக்கம் சுரந்தது.

பிறகு அபிமானம் ஏற்பட்டது.

கடைசியில் காதல் பற்றிக் கொண்டது.

எப்போதும் எதிலும் முற்போக்கான சிந்தனையையும் செயல்பாட்டையுமே பாணியாகக் கொண்டிருக்கும் தன் தாயார் நிச்சயம் தன்னுடைய முடிவை வரவேற்பாள்…பாராட்டுவாள் என்கிற நம்பிக்கையில் ஒரு சுபயோக சுப தினத்தில் தன் காதல் விஷயத்தை அவளிடம் தெரிவித்தாள் பிரியா.

பொறுமையாகக் கேட்டு முடித்த அவள் தாய் லட்சுமி, “இத பாரு பிரியா!…முதல்ல உன்னோட இந்த புரட்சிகரமான முடிவுக்காக உன்னைய நான் மனதார பாராட்டறேன்!…ஏன்னா இது ஒரு வகை தியாகம்!…ஆனா…அதே நேரம் நீ செய்யற இந்த தியாகத்துக்கு அந்த மனிதர்….அவர் பேர் என்ன சொன்னே?”

“திவாகர்..ம்மா!”

“ம்..ம்..திவாகர்!…அவர் தகுதியானவர்தானா? அப்படிங்கறதை தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா செயல்படு!…எதுக்காக சொல்றேன்னா?…நீ செய்யற தியாகம் தெய்வீகமானது!…அது…அது…அசிங்கப்பட்டு விடக்கூடாது பாரு?”

“ம்மா…வந்து அதை எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு…” இழுத்தாள் பிரியா.

சில நிமிடங்கள் யோசித்த லட்சுமி, “நீ…அவரை நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு!” என்றாள்.

தன் தாயார் செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு சரியான அர்த்தம் இருக்கும் என்று முழுமையாக நம்பும் பிரியா, மறு பேச்சின்றி “சரிம்மா!” என்றாள்.

மறுநாள் மாலை ஏழு மணிவாக்கில், பிரியாவின் வீட்டில் திவாகரும் அவன் மகளும் இருந்தனர்.

காபி உபசரிப்புக்கள் முடிந்த பின், நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் லட்சுமி.

“எப்படிங்க..இந்தக் காதல் ஒத்து வருமா?…உங்க வயசு முப்பத்தியெட்டு!…பிரியா வயசு பத்தொன்பது!….அதாவது உங்க வயசுல சரி பாதி!…இந்த வயசு வித்தியாசம் நடைமுறைல நிறைய சிக்கல்களை ஏற்படுத்துமே!”

“இல்லைங்க…நிச்சயம் ஏற்படுத்தாது!…எனக்கு நம்பிக்கையிருக்கு!” உறுதியாய் சொன்னான் திவாகர்.

“எதை வெச்சு அப்படி சொல்றீங்க?”

“நான் பிரியா மேல வெச்சிருக்கற காதல் உண்மையானது! ஆழமானது!…அதை வெச்சுத்தான் சொல்றேன்!”

“ம்ம்ம் நீங்க இவ்வளவு தூரம் உங்க மனசைத் திறந்து பேசினதினால நானும் அந்த உண்மையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும்!” லட்சுமி பீடிகை போட,

“எந்த உண்மையை?..”நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் திவாகர்.

“வந்து…எங்க பிரியாவுக்கு அப்ப ஒரு பதினாறு வயசிருக்கும்!…ஒரு நாள் நாங்க எல்லோரும் அவளை மட்டும் வீட்டுல விட்டுட்டு…பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டுக் கிழவியையும் கூட இருக்க வெச்சிட்டு, ஒரு திருமணத்திற்காக வெளியூர் போயிருந்தோம்!…பாருங்க…அன்னிக்குன்னு பாத்து அந்தக் கிழவிக்கு உடம்பு ரொம்ப முடியாமப் போயி…ஆஸ்பத்திரில கொண்டு போய் அட்மிட் பண்ணிட்டாங்க!…”

“அடக் கடவுளே…அப்புறம்?”

“அப்புறம் பிரியா தனியாகவே இருந்திருக்கா!…இந்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட ஒரு காலிப்பயல் நடுராத்திரில வீடு புகுந்து எங்க பிரியாவை நாசம் பண்ணிட்டுப் போயிட்டான் பாவி!…ஹூம்…அவன் இருட்டுல வந்து போனதினால அவன் யாரு…எவருன்னு இவளாலேயும் அடையாளம் காட்ட முடியாமப் போயிடுச்சு!…மேற்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியாம நாங்க இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாம அப்படியே மூடி மறைச்சிட்டோம்!”

கண்ணிமைக்காமல் அமர்ந்திருந்தான் திவாகர்.

“ஹூம்..எங்களால அந்த விஷயத்தை தான் மறைக்க முடிஞ்சது…இவ வயித்தை மறைக்க முடியலை!”

“…………………………………..”

“இவ கர்ப்பம் உறுதியானதும்…அதை அழிக்க முயற்சி பண்ணினோம்…அதுவும் முடியாமப் போனதும் இவளை உள்ளூர்ல வெச்சுப் பிரசவம் பார்த்தா பிரச்சினைன்னு வெளியூர் கொண்டு போயிட்டோம்!…அங்க இவளுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்திச்சு…ஆனா பொறந்த ஒரு மணி நேரத்துல அது செத்தும் போச்சு!…தன் பிறப்பு அதுக்கே பிடிக்கலை போலிருக்கு!…அப்புறம் எல்லாம் சுமுகமானதும் இவளை மறுபடியும் இங்க கூட்டிட்டு வந்திட்டோம்!”

இறுகிப் போன முகத்துடன் உட்கார்ந்திருந்தவன் சில நிமிடங்களில் தன் மகளை அழைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் வெளியேறினான்.

அடுத்த ஒரு வாரம் அவன் கொரியர் சர்வீஸ் ஆபீஸ் பக்கமே வராமல் போக…… அதைத் தன் தாயாரிடம் சொன்னாள் பிரியா.

“ஆபீஸ் போன் நெம்பர் இருந்தா போன் பண்ணிக் கேட்டுப் பாரு!”

“ம்…கேட்டுட்டேன்மா!…அவரு வேலைய ரிஸைன் பண்ணிட்டுப் போயி ஒரு வாரமாச்சாம்!…ராஸ்கல்! பாத்தியாம்மா…ரெண்டாந்தாரமா வர்றவ கூட இவனுக்கு கை படாத ரோஜாவா இருக்கணும்!…ஆனா நான் மட்டும் என்னைவிட ரெண்டு மடங்கு வயசுக்காரனை…அதுவும் எட்டு வயசுக் கொழந்தைக்கு அப்பனை….எதுவும் பேசாமக் கட்டிக்கணும்!…இதென்னம்மா நியாயம்!” பிரியா கேட்டாள்.

“என்னோட பொய் எப்படி அவனோட உண்மையான நிறத்தை உரிச்சுக் காட்டிடுச்சு பாத்தியா?”

“அம்மா..நீ…ஜீனியஸ்ம்மா!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *