செய்திகள் நாடும் நடப்பும்

பிரிட்டன், இந்திய உறவுகள் மேம்பட வழியுண்டா? சர்வதேச அரசியலில் சாதூர்யமாக நடைபோடும் பிரதமர் மோடி

* விஜய் மல்லையா, நீரவ் விவகாரம் ஐரோப்பிய யூனியனின் புறக்கணிப்பு


நாடும் நடப்பும்– ஆர்.முத்துக்குமார்


பத்து நாட்களுக்கு முன்பு நிறைவேறிய ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தரப்பட்ட ‘முதல் மரியாதை’ ஏனைய பிற தலைவர்களுக்கு தரப்படாதது அனைவர் கண்களிலும் தெளிவாகவே காண முடிந்த ஒன்று.

பைடனுக்கு நமது பிரதமர் மோடி பிரத்தியேக விருந்தை தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். பைடனின் வருகைக்காக மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது இல்லம் மகாராஜாக்களின் அரண்மனைகளை விட வண்ணமயமாய் ஜொலித்தது.

அதே மரியாதை நிமித்த கோலகல வரவேற்பை பிற தலைவர்களுக்கு தரப்படாதது ஏன்? என்று யாரும் விவாத குரல் எழுப்பவில்லை. ஒருவேளை ரஷ்ய அதிபர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வந்திருந்தால் நிலைமை வேறு விதமாகவே இருந்திருக்கும்!

சர்வதேச உறவுகளில் உள்ள பாதை, முட்புதருக்கு இணையானது. அதில் நடப்பவர்கள் சமாளித்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருப்பார்கள்.

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடிக்கு இருந்த ஓரு சவால் அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி தகுந்த பாதுகாப்பு சமாச்சாரங்களும் அது பிற தலைவர்களுக்கு ஏற்படுத்திடும் அசௌரியங்களும் தான்.

பொருளாதார வல்லரசுகளில் நமக்கு சிக்கலைத் தரும் ஓரு நாடு பிரிட்டனாகவே இருப்பது மறுக்க முடியாதது! நமது நாட்டுடன் தொப்புள் கொடி உறவுகள் கொண்ட ரிஷி சுனக் தான் தற்போது பிரிட்டனின் பிரதமர். அவரும் அவரது துணைவியார் அக்சத்தா மூர்த்தியும் ஜி20 மாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர்.

நமது முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ்சின் சேர்மன் நாராயண மூர்த்தியின் மகள் தான் அக்சந்தா.

இவர்கள் தற்போது உலகின் ஆறாவாது பொருளாதாரமாக இருக்கும் பிரிட்டனின் முதல் குடிமகன்கள்! இவர்களை ஐந்தாவது பொருளாதாரமாக உயர்ந்துள்ள இந்தியாவின் பிரதமர் மோடி வரவேற்பு விசேஷமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக தலைவர்களும் இந்திய தொழில் துறையும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தது.

பைடனுக்கு தரப்பட்ட கவுரவம் போல் இவர்களையும் வீட்டிற்கு அழைத்து கவுரவித்து இருக்கலாமே! என்று ஆச்சரியமாகவே எதிர்பார்த்தபடி நடக்காமல், கூட்டம் நடந்த அரங்கில் ஒரு தருணத்தில் தனியாக மூவரும் சந்தித்துக் கொண்டு பேசிய காட்சிகளில் ஏனோ நெருக்கம் காண முடியவில்லை. அதில் இருந்த கசப்பான எல்லைக்கோடு ஏன்?

நாம் அந்நாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி 75 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நமக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு ஒரு தலைவர் கூட மரியாதை நிமித்தமாகக் கூட மன்னிப்போ, அது தவறுதான் என்றோ கூறியது கிடையாது!

ஆனால் நமது நாட்டின் பல சமாச்சாரங்கள் பிரிட்டனும் பின்னிப் பிணைந்து இருப்பது தான் உண்மை!

இச்சூழ்நிலையில் நாம் அவர்களது சர்வதேச தனிமைப்படுத்துதலை பற்றிக் கூட அவலமாக பேசியதோ, சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்ததோ கிடையாது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய அந்நாட்டுக்கு பல முனைகளில் இருந்து வர்த்தக நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதை பார்க்கும்போது நாமும் இத்தருணத்தில் அழுத்தம் கொடுத்து வர்த்தக விரிவாக்கம் செய்யலாம். ஆனால் அப்படி இன்றி பரஸ்பர தேவைகளுக்கு ஏற்ற வர்த்தக கொள்கைளுக்கு கவனம் தந்து தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தியபடி ‘தங்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்’ FTA பெற வாதம் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பல ஆயிரம் அப்பாவி உயிர்களை பறிகொடுத்தது நாம். நமது பொருட்களை வியர்வை சிந்த உழைத்து உருவாக்கி அவர்களுக்கு தர அதற்கு வரியை பிடித்தம் செய்து தான் வர்த்தகம் புரிந்தனர் ஆங்கிலேயர் அரசு.

அப்பொருட்களை மிக குறைந்த விலையில் சர்வதேச சந்தையில் விற்று லாபம் சம்பாதித்ததை கொண்டு வளம் கண்டது இங்கிலாந்து அரசு கஜானா!

பிறகு நமது தேவைக்கு நமது இந்திய பணத்தில் அவற்றையே நாமே வாங்க வைத்தது அவர்கள் தான்! மொத்தத்தில் நமது பொருளாதார வளத்தை அப்பட்டமாக சுரண்டி நம்மை ஏழ்மை நாடாக மாற்றியதுடன் நமது ராணுவ வீரர்களை உலக யுத்தத்தில் பங்கேற்க செய்து பல லட்சம் பேரை உயிர் பலி கொடுக்க வைத்ததும் அவர்கள் தான்.

இத்தனை அவலங்களை செய்து விட்டு நமக்கு விடுதலை கொடுத்ததை வரலாற்று சிறப்புமிக்கதாக அறிவித்து அதில் சுகம் காணும் நாட்டின் பிரதமருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி வரவேற்பு தரும் நமது பரந்த மனத்திற்கு அவர்கள் பாராட்டவில்லை என்றாலும் ஏதேனும் தொந்தரவு தராமலாவது இருக்கலாம் அல்லவா?

கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல் வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், “தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தஞ்சமடையும் நாடாக பிரிட்டன் இருக்காது” என்று பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஜி20 அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊழலை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட்டும் கலந்துகொண்டார்.

விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் பிரிட்டனில் தஞ்சமடைந்தது குறித்தும் அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாம் துகென்தாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக பிரிட்டனும் இந்தியாவும் சில சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தஞ்சமடைவதற்கான நாடாக பிரிட்டன் உருவாகாது” என்று குறிப்பிட்டார்.

பிரிட்டனும் இந்தியாவும் சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடக்கத் தொடங்கினால் பிரிட்டன், இந்திய உறவுகள் மேம்படும் நாள் விரைவல் வரும்.

அந்நாளுக்காகக் காத்திருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *