செய்திகள்

பிரிட்டனில் 14 ஆண்டுக்கு பிறகு ஆட்சிமாற்றம் : தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி

Makkal Kural Official

ரிஷி சுனக் கட்சி படுதோல்வி

லண்டன், ஜூலை 5–

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர்கள் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், ரிஷி சுனக்க கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி காலம் முடிவடையும் நிலையில், இங்கிலாந்தின் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சின் சார்பில் ரிஷி சுனகும், தொழிலாளர் கட்சியின் சார்பில் கெய்ர் ஸ்டார்மரும் போட்டியிட்டனர். இதில் தொழிலாளர் கட்சி 410 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் எனத் தகவல்கள் தெரிவித்தன.

இதற்கு காரணம் நாட்டின் பொருளாதர நெருக்கடி, உறுதியற்ற ஆட்சித் தன்மை, உள்கட்சி சண்டையில் கடந்த 14 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில், டேவிட் கேமரூன், தெரெசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் என 5 ஐந்து வெவ்வேறு பிரதமர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சி தொடர் சறுக்கல்களை கண்டது. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போது வரை, 650 இடங்களில் பாதிக்கும் மேலான இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி 343 இடங்களை வென்றிருக்கிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 76 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.

தோல்விக்கு நானே காரணம்

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமராக இருந்த ரிஷி சுனக், “ இங்கிலாந்து தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நல்லெண்ணத்துடன் அதிகாரம் சுமூகமாகவும் அமைதியாகவும் மாறும். இந்த இழப்புக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரிட்டிஷ் மக்களால் தெரிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க செய்தியைப் புரிந்துகொள்கிறேன். உள்வாங்குவதற்கும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கிலாந்து தேர்தலில் வெற்றிபெற்ற தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர், “நாம் எதைக் கூறினோமோ அதை செய்தோம்! இந்த வெற்றிக்காக பிரசாரம் செய்தீர்கள், போராடினீர்கள், ஓட்டு போட்டீர்கள், இப்போது அந்த வெற்றி வந்துவிட்டது. மாற்றம் இப்போது தொடங்குகிறது. அது மிக சிறப்பாக இருக்கும். நான் நேர்மையாக இருப்பேன். தொழிலாளர் கட்சி, நம் நாட்டுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறது. உழைக்கும் மக்களின் சேவைக்காக, பிரிட்டனை மீட்டெடுக்கத் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *