செய்திகள்

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

6–ந்தேதியிலிருந்து விமான சேவை துவக்கம்

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி, ஜன.3–

இந்தியா – இங்கிலாந்து இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 6–ந்தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பல நாடுகள் அந்த நாட்டுடனான விமான சேவையை துண்டித்துவிட்டன. இந்தியாவிலும் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரையில் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தடை வரும் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்திருந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 29 பயணிகளுக்கு இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது 6ந் தேதியில் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவையை தொடர்வது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

வழிகாட்டும் நெறிமுறைகள்

இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறும்போது,

இந்தியாவிலிருந்து 6ந்தேதி முதல் இங்கிலாந்துக்கு விமானம் இயக்கப்படும். இங்கிலாந்திலிருந்து 8–ந்தேதி முதல் டெல்லிக்கு விமானம் இயக்கப்படும். வாரத்துக்கு 30 விமானங்கள் இயக்கப்படும். இந்தியத் தரப்பில் 15 விமானங்களும், இங்கிலாந்து தரப்பில் 15 விமானங்களும் இயக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தத் திட்டம் வரும் 30–ம் தேதிவரை அமலில் இருக்கும். அதன்பின் சூழலை ஆய்வு செய்து அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை (வழிகாட்டும் நெறிமுறைகள்) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைன் தளத்தில் (www.newdelhiairport.in) பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

* பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என காட்டும் நெகடிவ் அறிக்கையை எல்லா பயணிகளும் ஆன்லைன் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு சர்வதேச விமானங்களில் வருகிற அனைத்து பயணிகளும், இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கியதும் பணம் கொடுத்து, கட்டாயமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அல்லது அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிற பயணிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை விமான நிலையத்தில் செய்திருக்க வேண்டும்.

* விமான நிலையத்தில், வழிகாட்டும் நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உதவி மையங்களை அமைக்க வேண்டும்.

* கொரோனா தொற்று உறுதியாகிற பயணிகளை நிறுவன ரீதியில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட மாநில சுகாதார அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு வந்திருப்பது உருமாறிய கொரோனாவா என்பதை உறுதி செய்வதற்கு மாதிரிகளை அவற்றுக்கான உரிய பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

* பரிசோதனையில் பயணி உருமாறிய கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். தற்போதைய நெறிமுறைகள் படி சிகிச்சை அளிக்கப்படும். 14-வது நாள் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். நெகட்டிவ் என அறிக்கை வருகிற வரையில் பயணி தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *