புதுடெல்லி, அக்.19-
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22-ந் தேதி ரஷியா செல்கிறார்.
சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘பிரிக்’ எனகிற கூட்டமைப்பை கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின.
இதை தொடர்ந்து 2010 செப்டம்பரில் தென்ஆப்பிரிக்கா உறுப்பினராக இணைந்த பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது.
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.
இந்த நிலையில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வருகிற 22-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா வரும்படி பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி வருகிற 22-ந் தேதி ரஷ்யா செல்ல இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதுடன், மாநாட்டின் இடையே பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரிக்ஸ்’ மாநாடு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, முக்கிய உலகளாவிய பிரச்சினைகளை விவாதிக்க தலைவர்களுக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும்.
மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான சர்வதேச பிரச்சினைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு மூலம் முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியத்தைக் கண்டறிவதற்கும் உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பை வழங்கும்” என கூறப்பட்டுள்ளது.