வெப்பம் அதிகரித்து வேர்வை வெளிவரும் அந்த மாதத்தில் எப்படியாவது மழை வர வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்திருந்தார்கள் நல்ல மனதுக்காரர்கள். எல்லாரும் சேர்ந்த இடம் ஒரு கோயில்.
“இந்தப் பிரார்த்தனை பண்றதால கண்டிப்பா மழை வரும்னு நினைக்கிறீங்களா?”
“நிச்சயமா கூட்டுப் பிரார்த்தனைக்கு அவ்வளவு வலிமை இருக்கு.நிச்சயமா மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு “
என்று தங்கள் பிரார்த்தனையின் வலிமையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அங்கு கூடியிருந்தவர்கள்.
” இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா ? “
என்று ஒரு பெரியவர் கேட்க
“சில நேரம் நடக்கும் .சில நேரங்கள்ல நடக்காது. இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு நம்பிக்கையா? அவன் அவன் செவ்வாய் கிரகத்திலயும் சூரியன் கிட்டயும் போய் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கும்போது ,இப்படி ஒரு மூட நம்பிக்கையா?
என்று கேலியாக ஒருவர் கேட்க
” எந்த விஷயத்தையும் நாம சாதாரணமாக எடுத்துக்கிற முடியாது .எல்லாம் நடக்கும்னு நம்பிக்கை வேணும்”
என்று வாதம். விவாதம், நம்பிக்கை அவ நம்பிக்கை என்று அத்தனையும் நடந்து கொண்டிருந்தது அந்தக் கோயிலில்.
” சரி இப்ப என்ன பண்ணலாம்? பிரார்த்தனையை ஆரம்பிக்கலாமா? எல்லாம் வந்துட்டாங்களா?
என்று ஒருவர் கேட்க
“எல்லாரும் வந்துட்டாங்க ஆரம்பிக்கலாம் “
என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு விஷயம் ஆச்சர்யத்தைத் தந்தது மட்டுமில்லாமல் ஒரு அவர்களுக்கு அதிசயத்தையும் விதைத்தது.
” நமக்கு இல்லாத இந்த நம்பிக்கை இந்த குழந்தைக்கு எப்படி தெரிஞ்சது ? கண்டிப்பா அந்த குழந்தையாேட நம்பிக்கை பலிக்கும். கண்டிப்பா மழை வரும் என்று சொன்னார்கள் அங்கு கூடி இருந்தவர்கள்.
” பாப்பா எதுக்காக இப்படி வந்திருக்க ?”
என்று அங்கிருந்த ஒருவர் கேட்க
” இன்னைக்கு நீங்க எல்லாம் பிரார்த்தனை பண்றீங்க .மழை வரும்னு சொன்னாங்க . அதுதான் இப்படி வந்தேன்”
என்று சொன்னாள் ஒரு பெண்.
” எப்படி கண்டிப்பா மழை வரும்னு நீ சொல்ற பாப்பா?
என்று ஒருவர் கேட்க
“நிச்சயமா நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுதான் அப்படி வந்தேன் “
என்று அந்தச் சிறுமி சொல்ல
அந்தச் சிறுமியின் நம்பிக்கையை முன்வைத்து பிரார்த்தனை அறிவித்தார்கள் .
“நம்மோட பிரார்த்தனை பலிக்குதாே இல்லையாே கண்டிப்பா இந்தக் குழந்தையோட மனசுக்காவது மழை வரும்னு நினைக்கிறேன் “
என்று அந்தக் கூட்டு பிரார்த்தனையை வெட்டவெளியில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். பிரார்த்தனைகள் செய்யச் செய்ய சிறிது நேரத்திற்கு எல்லாம் மழை “சோ “வென பொழிய ஆரம்பித்தது.கூடியிருந்த மக்கள் ஆளாளுக்கு திசை தெரியாமல் ஓடினார்கள்.
“நம்ம பிரார்த்தனை பலிச்சிருச்சு போல . அதான் இப்படியொரு மழை “
என்று சொல்லிக் கொண்டு ஓடினார்கள்.
” மழை வருமா? வராதான்னு விவாதம் நடந்திட்டு இருக்கிற இந்த நேரத்தில கண்டிப்பா மழை வரும்னு நினைச்சு கூடவே குடையும் எடுத்திட்டு வந்தாளே அந்தச் சிறுமி அவளுக்காகத்தான் இந்த மழை பேஞ்சிருக்கு.நம் பிரார்த்தனைக்கு இல்ல ” என்று மக்கள் சொல்லிக் கொண்டார்கள்.
மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. கையில் குடையைப் பிடித்தபடியே சந்தோசமாக நடந்து சென்று கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.