சிறுகதை

பிராயச்சித்தம் – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி 10.15

முன்பக்க கண்ணாடியில்’ நந்தினி’ என்று பெரியதாக எழுதப்பட்டிருந்த அந்த ஆட்டோ, கோயம்பேட்டிலிருந்து வடபழனியை நோக்கி போய்க்கொண்டிருந்தது.

பின் சீட்டில் ஒரு இளம் ஜோடி அமர்ந்திருந்தனர்.

டிரைவர் சீட்டில் கணேசன் அமர்ந்திருந்தான்.

இளம் ஜோடி தங்களுக்குள் மெய் மறந்து ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள்.

அவை கணேசனின் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.அவர்கள் தங்களின் அடுத்த பிளான் பற்றி பேச ஆரம்பித்ததும் இதை கேட்டுக் கொண்டு வந்த கணேசனுக்கு ‘ திடுக்’கென்றது.

உடனே ஆட்டோவை தான் குடியிருக்கும் குப்பத்தை நோக்கி மாற்றி ஓட்டினான்.

செல்லை எடுத்து தன் நண்பர்கள் சிலருக்கு போன் செய்தான்.

ஆட்டோ இப்போது குப்பத்தில் போய் நின்றது.

” டிரைவர், என்ன இது வடபழனிக்கு போகாம வேற எங்கயோ கொண்டு வந்து

நிறுத்தியிருக்கீங்க?”

” தம்பி, உங்க காதலியோட நீங்க ஆட்டோவை விட்டு கீழே

இறங்குங்க”

” எதுக்கு?”

” இறங்குங்க சொல்றேன்”

இருவரும் பேந்தப் பேந்த விழித்தபடி மெதுவாக இறங்கினார்கள்.

அதே சமயம் கணேசனின்

நண்பர்கள் அங்கு வந்து

ஆட்டோவை வட்டம் போட்டு

சூழ்ந்து நின்றார்கள்.

” நீங்கள்லாம் யாரு?” அந்த

இளம் பெண் பயந்தபடி கேட்டாள்.

” சொல்றம். அதுக்கு முன்ன .. ஆட்டோவுல வரும் போது

வடபழனி லாட்ஜ்ல ரூம் எடுத்து

தங்கிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு பேசிட்டு

வந்தீங்களே…யார் நீங்க? என்ன பிரச்சினை…ஏன்

தற்கொலை பண்ணிக்கனும்?

இதுக்கு பதில். சொல்லுங்க”என்று கேட்டான் கணேசன்.

இருவரும் கூட்டத்தை பார்த்து தயங்கியபடி மெல்ல மெல்ல விஷயத்தை சொன் னார்கள்.

இருவரும் காதலர்கள். ஊர் செங்குன்றம். வேறு வேறு சாதி. பெற்றோர்கள் எதிர்ப்பு.

மீறி ஓடிப்போய் திருமணம்

செய்து கொண்டால் ‘ ……. ‘ என்பது பெற்றோர்களின் எச்சரிக்கை.

அதனால்தான் இந்த தற்கொலை முடிவு.

கணேசன் தன்னைப்பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு

நண்பர்களுடன் ‘என்ன செய்யலாம்’ என்று கலந்துரையாடினான்.பின் இருவரின் பெற்றோர்களிடமும் போனில் நிலவரத்தை சொல்லி பேசிப்பார்த்தான்.அவர்கள் சம்மதிக்க தயாராக இல்லை.

‘ எக்கேடோ கெட்டு ஒழியட்டும்’

என்று அலுத்துக் கொண்டார்கள்.

நண்பர்களின் உதவியுடன்

கணேசன் அவர்களுக்கு

ஒரு கோவிலில் திருமணம்

செய்து வைத்தான்.

நண்பர்கள் அந்த ஜோடிக்குவேலை வாய்ப்பும் குடியிருக்க

வீடும் அந்த குப்பத்திலேயே ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

திருப்தியடைந்த கணேசன் ஆட்டோவை இப்போது தன் வீட்டு்க்கு திருப்பினான்.

வீட்டில் நுழைந்த கணேசன் கடவுள் படத்திற்கு பக்கத்தில் மாட்டியிருந்த ஒரு பெண்ணின் படத்திற்கு முன் நின்று கொண்டு தன் மனதுக்குள் இப்படி பேசினான்.

” நந்தினி! வேற மதத்துக்காரனை காதலிச்ச நீ, அவன் கூட ஓடிப்போக இருந்த

போது உன்னை கையும் களவுமா பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வந்து நம்ம அப்பா முன்னாடி நிறுத்தினேன்.

அது மிகப்பெரிய தப்புனு எனக்கு அப்ப தெரியல.

கண்மண் தெரியாத அப்பா உன்னை அடிச்ச அடியில

நீ வலி தாங்க முடியாம செத்துப்போய்ட்ட. அப்பாவும் கொலைக் குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போயிட்டார்.

உன்னை இழந்ததற்கு பிராயச்சித்தமா இது வரைக்கும் ஏழு ஜோடிகளுக்கு

காதல் திருமணம் செய்து வச்சிருக்கிறேன். இன்னிக்கு எட்டாவதா தற்கொலை

பண்ணிக்க இருந்த ஒரு ஜோடிக்கு அட்வைஸ் பண்ணி தடுத்து அவங்களுக்கும்

திருமணம் செய்து வச்சிட்டேன்.

இந்த பாவி அண்ணனை மன்னிச்சிடும்மா. ப்ளீஸ்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *