புதுடெல்லி, பிப்.10–
பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 12ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரான்சில் முதல் இந்திய துணைத் தூதரகத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் மார்சேயில் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தைப் இருவரும் பார்வையிடுவார்கள்.
அதன் பின்னர் பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார். அந்நாட்டில் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.