செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் தேசியநாள் விழா: 14 ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லி, ஜூலை 10–

ஜூலை 14 ந்தேதி பிரான்ஸ் நாட்டின் தேசிய நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின்போது, பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டு, பிரான்ஸ் தேசத்திற்கு விடிவு காலம் பிறந்ததை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய குடியரசு தின விழாவுக்கு ஒப்பான, பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் பிரெஞ்சுப் படைகளுடன் இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையினரும் பங்கேற்கின்றனர். இதற்காக முப்படைகளைச் சேர்ந்த 269 பேர் பிரான்ஸ் சென்றுள்ளனர். அவர்களுக்கு பிரான்ஸ் படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய படையினருடன் நேற்று பிரான்ஸ் படையினர் ஒத்திகை அணிவகுப்பை நடத்தினர்.

விமான சாகசம்

14ஆம் தேதி பிரான்ஸ் விமானப்படையுடன் இந்தியாவுக்கு பிரான்ஸ் அளித்த 36 ரபேல் விமானங்களில் 4 விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபட உள்ளன. மேலும் 2 C-17 குளோப் மாஸ்டர்ஸ் விமானங்களும் விமானப்படை ஹெலிகாப்டர்களும் பிரெஞ்சு அணிவகுப்பில் பங்கேற்கின்றன. இவைதவிர, வானில் பறந்தபடியே, போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்ப வல்ல, இந்திய விமானப்படையின் IL-78, டேங்கர் விமானமும் பங்கேற்கிறது.

பிரான்ஸ் தேதிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும், பிரதமர் நரேந்திர மோடி, அதன்பின்னர், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு மேலும் பல ரபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *