செய்திகள்

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்; பிரதமர் மோடி, நடிகர் மாதவனுடன் அதிபர் இமானுவேல் மேக்ரான் ‘செல்பி’

புதுடெல்லி, ஜூலை 17–-

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் எடுத்துக் கொண்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14-ந் தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். 14-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற அந்த நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். அதை தொடர்ந்து, அன்றிரவு பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

நடிகர் மாதவன் பங்கேற்பு

இந்த விருந்தில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நடிகர் மாதவன் இந்த விருந்தில் பங்கேற்றார். விருந்தின் முடிவில் பிரதமர் மோடி, நடிகர் மாதவன் மற்றும் பிரான்சின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மேத்யூ பிளாமினி ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ‘செல்பி’ எடுத்தார். அந்த ‘செல்பி’ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக பிரான்சில் நடந்த விருந்தில் தான் கலந்து கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து, நடிகர் மாதவன் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது:-

பாரீசில் நடந்த பிரான்ஸ் தினக் கொண்டாட்டத்தின் போது, இந்தியா- பிரான்ஸ் உறவுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், அர்ப்பணிப்பும் தெளிவாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அதிபர் மெக்ரானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் இந்த நட்பு நாடுகளின் எதிர்காலத்திற்கான தங்கள் பார்வையை ஆர்வத்துடன் விவரித்தபோது நான் மிகவும் வியந்துபோனேன்.

அவர்களின் நேர்மறையான மற்றும் பரஸ்பர மரியாதை ஒரு அன்பான அரவணைப்பு போல இருந்தது. அவர்களின் பார்வையும் கனவுகளும் நம் அனைவருக்கும் விரும்பிய மற்றும் பொருத்தமான நேரத்தில் பலனளிக்க நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன். விருந்தின் முடிவில் அதிபர் மெக்ரான் ஆர்வத்துடன் எங்களுக்காக ஒரு ‘செல்பி’ எடுத்தார். அப்போது நமது பிரதமர் மிகவும் கருணையுடனும் இனிமையாகவும் அதில் ஒரு அங்கமாக எழுந்து நின்றார்.

அந்த படத்தின் தனித்துவம் மற்றும் தாக்கம் இரண்டுக்காகவும் என் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ஒரு தருணம் இது. கருணை மற்றும் பணிவு பற்றிய நம்பமுடியாத பாடத்துக்காக அதிபர் மெக்ரான் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி. பிரான்சும், இந்தியாவும் என்றென்றும் ஒன்றாக செழிக்கட்டும்.

இவ்வாறு மாதவன் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *