இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள்
மொத்தம் 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
பாரிஸ், ஜூலை 27–
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கி, ஆகஸ்ட் 11 ந்தேதி வரை 17 நாட்களுக்கு நடக்கிறது.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர். அதாவது மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் உள்ளனர்.
1900, 1924 ஆகிய ஆண்டுகளில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 124 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசிஸ் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான், முதல் முறையாக பெண்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டிகளை காண லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்பு பணிகளுக்காக பிரான்ஸ் போலீஸ் மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு பணியில் 40,000 பேர்
பாதுகாப்புப்படையினர், போலீசார், சிறப்பு அதிரடி படையினர் என மொத்தமாக 40,000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனவே பாரிஸ் வான் பரப்பில் 150 கி.மீ பரப்பளவுக்கு விமானங்கள், டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதில், மைதானத்திற்கு வெளியே பிரபல நதியான ‘சென்’ நதிக்கரையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் என அனைவரும் சுமார் 162 படகுகள் மூலமாக செயின் நதிக்கரையில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு படகுகள் அணிவகுத்து வந்தது.
முன்னதாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டு போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது இந்தியா. இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 35 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, தடகளம் என 16 போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தடகளம், பாய்மரப் படகு, துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இம்முறை ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த போட்டியில் இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.