செய்திகள்

பிரான்சில் சிறுவன் சுட்டுக்கொலை: கண்டித்து 5 வது நாளாக வன்முறை

பெல்ஜியம், சுவிட்சர்லாந்திலும் பரவல்

பாரீஸ், ஜூலை 3–

பிரான்ஸ் நாட்டில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெடித்த போராட்டம் 5 வது நாளாக தொடரும் நிலையில், பெல்ஜியம் மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் நான்தெரே பகுதியில் கடந்த 27ம் தேதி போலீசாரால் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் 5-வது நாளாக வன்முறை நீடித்து வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்ட இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஹே லெஸ் ரோஸஸ் நகர மேயர் வின்சென்ட் ஜீன்பிரன் வீட்டை வன்முறையாளர்கள் சேதப்படுத்தினர். இதில் மேயரின் மனைவி மற்றும் குழந்தை காயமடைந்தனர்.

அண்டை நாடுகளிலும் பரவல்

இதனிடையே சீனர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வன்முறை சம்பவங்கள் அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கும் பரவியுள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

கட்டுக்கடங்காத வன்முறை சம்பவங்களால் அசாதாரண சூழலை கட்டுப்படுத்த 45000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமைதி காக்குமாறு சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *