சென்னை, ஜன.9–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிராட்வே, பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய “கல்வி அரங்கம்” அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளின் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் திறன் வளர்ச்சிக்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25,000 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய நவீன “கல்வி அரங்கம்” கட்டப்படவுள்ளது.
இந்த நவீன கல்வி அரங்கம் ஒரே நேரத்தில் 720 நபர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில், முக்கிய பிரமுகர்கள் அறை, கூட்டரங்கம், உள் விளையாட்டுப் பகுதி, சேமிப்பு அறை, மின்சார அறை, நவீன கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 20 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–
இன்றைக்கு 20 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி இருக்கின்றோம். விரைவில் கடைசி ஆண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த வருடம் மட்டும் முதலமைச்சர் 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாரதி கல்லூரியில் மட்டும் புதுமைப் பெண் திட்டம் மூலமாக கடந்த 4 வருடங்களில் மட்டும், 3,000 மாணவிகள் பயன்பெற்றுள்ளார்கள். இது மிகப் பெரிய ஒரு சாதனை. அதுமட்டுமல்ல, நான் முதல்வன் திட்டம் மூலமாக உங்களை மாதிரி மாணவிகளுக்கு வேலை வாய்ப்பையும் நம்முடைய அரசு ஏற்படுத்தி தருகிறது. இந்த கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் பல்வேறு திறன் பயிற்சிகளை பெற்று பயனடைந்து இருக்கின்றீர்கள். குறிப்பாக 1,400 மாணவிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து பணியையும் உறுதி செய்திருக்கிறது நம்முடைய அரசு.
இன்று அடிக்கல் நாட்டியிருக்கின்ற பணிகள், இன்னும் 4 மாதங்களில் இந்த ஆடிட்டோரியத்திற்கான பணிகள் எல்லாம் முடிவடைந்து, நிச்சயம் நீங்கள் அழைத்தீர்கள் என்றால், நானே வந்து அதை உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பேன். எனவே, உங்களுடைய வளர்ச்சிக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறதோ, அதேபோல் நீங்களும் இந்த அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். அனைவருக்கும் மீண்டும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை கூறி, விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு.அ.வெற்றி அழகன், திரு.ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை செயலாளர் திரு. பொ. சங்கர், இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி ஆணையர் திருமதி. எ.சுந்தரவல்லி, இ.ஆ,ப., சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., பாரதி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் டெ.கிளாடிஸ், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





