செய்திகள்

பிரமாண்ட கோதண்டராமர் சிலை 7 மாதங்களுக்கு பிறகு கர்நாடக மாநில எல்லையை அடைந்தது

ஓசூர், மே.23-

திருவண்ணாமலையில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை 7 மாதங்களுக்கு பிறகு கர்நாடக மாநில எல்லையை அடைந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் பிரமாண்ட கோதண்டராமர் சிலை நிறுவ அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக 350 டன் அளவிலான பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரகோட்டை என்ற இடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு பெரிய லாரியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்றப்பட்டது. பல்வேறு இடங்களில் அந்த லாரி செல்ல தடைகள் ஏற்பட்டன. லாரியின் டயர்கள் அடுத்தடுத்து வெடித்தும் தடங்கல் ஏற்பட்டன. ஒரு சில இடங்களில் சிலையை கொண்டு தற்காலிக பாலங்கள் அமைத்தல், சாலையோர கடைகளை அகற்றுதல் என்று பல்வேறு சிரமங்களை கடந்து ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை வந்தடைந்தது.

கடந்த 3-ந் தேதி கோதண்டராமர் சிலை சாமல்பள்ளம் என்ற இடத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே சிலையை கொண்டு செல்லக்கூடிய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும், சிலை ஏற்பட்டாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அதில் சுமுக தீர்வு ஏற்பட்டு சிலை கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டும் என்பதால் அங்கு சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

இதற்காக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. 14 நாட்களுக்கும் மேலாக அந்த இடத்திலேயே இருந்த சிலை நேற்று முன்தினம் நள்ளிரவு பேரண்டப்பள்ளியில் இருந்து புறப்பட்டது. பத்தலப்பள்ளி, சீதாராம் மேடு வழியாக சென்ற சிலை நேற்று காலை 5 மணி அளவில் ஓசூர் நகரை அடைந்தது. அங்கிருந்து ஜூஜூவாடி வழியாக தமிழக – கர்நாடக மாநில எல்லையை கடந்து, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை அடைந்தது. இதன் மூலம் சுமார் 7 மாதங்களாக திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்ற லாரி தற்போது கர்நாடக எல்லையை அடைந்துள்ளது. அத்திப்பள்ளியில் 2 நாட்கள் சிலையை நிறுத்தி வைத்து, அதன் பின்னர் பெங்களூருவுக்கு கொண்டு செல்ல உள்ளதாக சிலை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *