சினிமா செய்திகள்

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘ராதே’ திரைப்படம்

சென்னை, ஏப்.27–

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரபு தேவா இயக்கத்தில் மிகப் பிரமாண்ட பொருட் செலவில் ஜீ ஸ்டூடியோ தயாரித்து சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ திரைப்படம் மே 13ந் தேதி ரம்ஜான் அன்று உலகம் முழுவதும் இணையதளம் மற்றும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் சல்மான் கானுடன் திஷா பதானி, ரன்தீப் ஹுடா மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சல்மான் கான் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

இதன்மூலம் உலக அளவில் முதல் முறையாக பல்வேறு தளங்களில் படத்தை வெளியிடும் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஜீ ஸ்டூடியோ பெற்றுள்ளது.

இது குறித்துக் கூறிய ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஷாரிக் படேல், ‘தற்போதைய தொற்று பரவல் சூழலில் புதுமையைப் புகுத்துவது என்பது கட்டாயமான ஒன்றாகி உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறையை நாங்கள் மேற்கொண்டிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. உலகம் முழுவதும் 40 நாடுகளில் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாக உள்ளது’ என்றார்.

இந்த திரைப்படம் குறித்துக் கூறிய நடிகர் சல்மான் கான், ‘அரசாங்கம் வகுத்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப படத்தை எங்களால் முடிந்தவரை பல திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்களை ஆதரிக்க முடியும். ஆனால் அதே சமயம் வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த திரைப்படம் பார்வையாளர்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பல்வேறு வழிகளையும் நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்தக் காலக்கட்டத்தில் பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பொழுதுபோக்க விரும்புவதை நாங்கள் மறுப்பதிற்கில்லை’ என்று தெரிவித்தார்.

ஜீ5 இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி மனிஷ் கல்ரா கூறுகையில், ‘ராதே திரைப்படத்தின் மூலம் சல்மான் கானுடன் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும்’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்த திரைப்படம் ஜீ5 மற்றும் ஜீபிளெக்ஸ் மற்றும் டிடிஎச் தளங்களான டிஷ், டி2எச், டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகியவற்றிலும் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *