செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்: நெடுமாறன் பேட்டி

‘அவருடைய குடும்பத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன்’

தஞ்சாவூர், பிப்.13–

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மனைவி மற்றும் மகளுடன் நலமுடன் இருக்கிறார். அவருடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடைய அனுமதியுடன்தான் நான் இத்தகவலைத் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இவ்வளவு காலம் கழித்து பிரபாகரன் பற்றி இப்போது சொல்ல வேண்டிய நிலை ஏன் வந்தது என்றால், அதற்கான சூழல் தற்போது இலங்கையில் கனிந்துள்ளது. ராஜபக்சே குடும்ப ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளது. அதனால் இத்தகவலை வெளியிடுகிறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தரும். விரைவில் பிரபாகரன் தமிழீழம் தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிடுவார். ஆனால் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க முடியாது. பிரபாகரன் மக்கள் முன் தோன்றும்போது தமிழக அரசு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009–ம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *