செய்திகள்

பிரபல வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு அக்டோபர் 12ல் இந்திரா சிவசைலம் அறக்கொடை விருது

சென்னை, செப் 12–

பிரபல வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ், சிவசைலம் 9ம் ஆண்டு அறக்கொடை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக சங்கீதத்தில் பேரார்வம் கொண்ட ஒரு ரசிகையாகவும், அதனைப் பேணி வளர்க்கும் புரவலராகவும் வாழ்ந்தவர் இந்திரா சிவசைலம். தன் அன்னையின் நினைவைப் போற்றும் வகையில் 2010ம் ஆண்டில் இந்திரா சிவசைலம் எண்டோமெண்ட் (அறக்கொடை) நிதியத்தை ‘டாபே’ அதிபர் மல்லிகா சீனிவாசன் நிறுவினார்.

மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் ஒத்துழைப்போடு நிறுவப்பட்டு இயங்கி வரும் இந்த அறக்கொடை நிதியம், மிக நேர்த்தியான கர்நாடக இசைக்கலைஞர்களை அங்கீகரிப்பதையும், ஊக்குவிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இந்த அறக்கொடை பதக்கத்தைப் பெறுவதற்கான வெற்றியாளர் ஒவ்வொரு ஆண்டும் மியூசிக் அகாடமியின் அறக்கொடை குழுவின் உறுப்பினர்கள் மற்றும் டாபே நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலரான மல்லிகா சீனிவாசன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவால் தேர்வு செய்யப்படுகிறார். மியூசிக் அகாடமியில் நடைபெறும் விழா நிகழ்ச்சியில், விருதுக்காக தேர்வு செய்யப்படும் இசைக் கலைஞர் தனது இசைக் கச்சேரியை விழா நாளில் நடத்துவார்.

இந்த விருதை இந்த ஆண்டு பெறுபவர் – பிரபல வீணை இசைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ். 6வது தலைமுறை இசைக்கலைஞரான இவர் புகழ்பெற்ற லால்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்னை ராஜலட்சுமியின் கீழ் 3 வயதில் தனது வீணை பயிற்சியை இவர் தொடங்கினார். அதன் பிறகு குரு விதூஷி பத்மாவதி அனந்தகோபாலனிடம் பயிற்சி பெற்றார். பின்பு வீணை வித்வான் பத்மபூஷன் எஸ். பாலச்சந்தர் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறும் வாய்ப்பை பெற்றார்.

பல்வேறு பாணிகள் மீதும், வீணையை வாசிக்கும் உத்திகள் குறித்தும் மேற்கொண்ட ஆய்வில் முனைவர் பட்டத்தையும் ஜெயந்தி பெற்றிருக்கிறார்.

விருது வழங்கும் விழா அக்டோபர் 12ந் தேதி மியூசிக் அகாடமியில் மாலை 6 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *