சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகர் 61 வயது கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்

கொச்சி, பிப்.17–

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று மாரடைப்பால் கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 61.

அவருக்கு மாயா என்ற மனைவியும், விஷ்னு சிவா என்ற மகனும், விண்டா என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

ஆரம்ப கால கட்டத்தில் சில படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்தவர். ராஜமாணிக்யாம், 2 ஹரிஹர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆடு ஒரு பகீரா ஜீவி ஆனு, ஒரு வக்கன் செல்ஃபி, லைஃப் ஆஃப் ஜோசுட்டி, குஞ்சிராமாயணம், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், அமர் அக்பர் அந்தோணி, அடி கப்யாரே கூட்டாமணி, கட்டப்பணையிலே ரித்விக் ரோஷன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

பரஸ்பரம் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு தமிழில் நடிகர் சிலம்பரசனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவுக்கு மாமாவாக நடித்தார். தொடர்ந்து ‘ராஜா ராணி’‘நண்பேன்டா’ படத்திலும் கோட்டயம் பிரதீப் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.