திருவனந்தபுரம், ஜன.10-
புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 வயதில் காலமானார். ஒரு வருடத்திற்கும் மேலாக கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் காலமானார்.
50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய சினிமாவிற்கு வழங்கியுள்ளார். திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் அவரது இனிமையான குரல் எதிரொலித்தது.
புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாகரன். 1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் அறிமுகமானார்.
எம்.எஸ்.வி., இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி. பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது.