சினிமா செய்திகள்

பிரபல பாடகர் பம்பா பாக்யா திடீர் மாரடைப்பால் மரணம்

சென்னை, செப்.2–

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42.

பம்பா பாக்யா நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத் துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்தது. இதனால் பம்பா பாக்யாவை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (வியாழன்) மரணம் அடைந்தார்.

அவருக்கு இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா உள்ளிட்ட இசைத் துறையினர் மற்றும் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் ‘புள்ளினங்காள்’, சர்க்கார் படத்தில் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தில் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.