படவுலகத்தினர் அதிர்ச்சி
சென்னை, பிப்.19–
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி ‘திடீர்’ மாரடைப்பால் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57. அவரது மறைவுச் செய்தி கேட்டு படவுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மயில்சாமி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட, குடும்பத்தினர் அவசரமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது. அவரின் இறப்பை டாக்டர்கள் உறுதிசெய்தனர்.
மயில்சாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரயுலகத்தினர் இரங்கல் தெரிவித்தனர். மயில்சாமியின் திடீர் மரணம் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிமிக்ரியில் பிரபலமானவர்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 1965, அக்டோபர் 2ல் பிறந்தவர் மயில்சாமி. மேடை நாடகங்களில் தோன்றி, மிமிக்கிரி கலைஞனாக பயணித்து பலக்கட்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். பின்னர், 1984–ம் ஆண்டில் தாவணிக்கனவுகள் மூலம் அறிமுகமானார். முக்கிய வேடத்தில் நடித்தது கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் தான். அந்த படத்தில் மெக்கானிக்காக வரும் கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தார்.
தொடர்ந்து வெற்றி விழா, பணக்காரன், செந்தமிழ் பாட்டு, உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல் என நூற்றுக்கணக்கான படங்களில் சிறு வேடங்களில் நடித்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டார். 2000–ம் ஆண்டுக்கு பின் மறைந்த நடிகர் விவேக் உடன் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் அசத்தி தனி வரவேற்பைப் பெற்றார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார். 300–க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். காமெடி மட்டுமல்லாது குணச்சித்ர வேடங்களிலும் நடித்து அசத்தினார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மேடைகளில் காமெடி மற்றும் மிமிக்கிரி மூலம் மக்களை பெரிதும் கவர்ந்தார்.
கொரோனா காலத்தில்
உதவிக்கரம் நீட்டியவர்
கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி கிடந்த சூழலில் தான் வசித்து வந்த பகுதியில் வீடு வீடாக சென்று மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தார்.
சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலும் மக்களுக்கு உதவினார்.
ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் தாராளமாக பணம் வழங்கியவர்.
கொடை குணம் சுவாத்திலேயே கொண்டவர். வீடு தேடி வந்து உதவி கேட்டால் மறுக்காமல் உதவியர். எளிமையாக யாருடனும் பழ்கக்கூடியவர்.
எம்.ஜி.ஆரின் பக்தர்
எம்ஜிஆரின் தீவிர பக்தராக இருந்தார் மயில்சாமி. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்டவர். அடிக்கடி திருவண்ணமாலைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தவர்.
சின்னத்திரையில் மர்மதேசம் என்ற சீரியலில் நடித்துள்ளார். அசத்த போவது யாரு உள்ளிட்ட பல்வேறு காமெடி டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார்.
2 மகன்கள்
மயில்சாமிக்கு அன்பு மயில்சாமி (அருமைநாயகம்), யுவன் மயில்சாமி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரையும் சினிமாவில் ஹீரோவாக்கியவர். இருவரும் வளரும் நடிகர்கள்.
தேர்தலில் போட்டி
மயில்சாமி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டடார். ஆனால் தோல்வி அடைந்தார்.
கடைசிப்படம்
நடிகர் மயில்சாமி கடைசியாக கிளாஸ்மேட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடிகாரர்கள் தொடர்பான இந்த கதை சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் விதமாக உருவாகி உள்ளது. படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டார். விரைவில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது. இதுவே இவரது கடைசிப்படம்.