மதுரை, நவ 10:
பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் உண்மைப் பெயர் பி. சௌந்தர் ராஜன், இன்று மதுரையில் உள்ள அவரது வீட்டில் (சத்திய சாய் நகர்) 65 வயதில் காலமானார்.
1958 நவம்பர் 13 ஆம் தேதி பிறந்த இந்திரா சௌந்தர் ராஜன், திரைக்கதை மற்றும் தொடர்களுக்காக பிரபலமானவர். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைக்கதைகள் என பல்வேறு துறைகளில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய இவர், ஆரம்பத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் முழுநேர எழுத்தாளராக மாறினார்.
அவருடைய கதைகள் பெரும்பாலும் அமானுஸ்ய சம்பவங்கள், தெய்வீகம், புனர்ஜன்மம், பேய்கள் உள்ளிட்ட விஷயங்களை மையமாகக் கொண்டவை, மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை.
மாதந்தோறும் அவரது இரண்டு அல்லது மூன்று நாவல்கள் ‘கிரைம் ஸ்டோரி’ மற்றும் ‘டுடே கிரைம் நியூஸ்’ போன்ற இதழ்களில் வெளியாகின. பொதிகை டிவியில் “காஞ்சியின் கருணை” என்ற நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட எபிசோட்களை தயாரித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சங்கரமடத்தின் முனைவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் பெருமைகளை பிரபலபடுத்தினார்.