மலகா, நவ. 20–
தெற்கு ஸ்பெயினின் மலகாவில் உள்ள மார்டின் கார்பெனா விளையாட்டு மைதானத்தில் நடந்த டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டென்னிஸில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.
டேவிஸ் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 29 ஒற்றையர் பிரிவில் வெற்றிகளைப் பெற்றுள்ள ரஃபேல் நடால், 2004, 2008, 2009, 2011 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதுவரை 14 பிரெஞ்சு ஓபன், 2 ஆஸ்திரேலியா ஓபன், 2 விம்பிள்டன், 4 அமெரிக்க ஓபன், 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம், 90 ஏடிபி தொடர் என பல்வேறு சாதனைகளை ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் படைத்துள்ளார்.22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் நவம்பர் மாதம் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ரஃபேல் நடால் தனது கடைசி ஆட்டத்தில் 6–-4, 6-–4 என்ற செட் கணக்கில் டேவிஸ் கோப்பையில் 80-ஆம் தரவரிசையில் உள்ள வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்ஸ்கல்ப்பிடம் தோல்வியடைந்தார்.
இதன்மூலம், ஸ்பெயின் காலிறுதியில் 2-–1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து “ரபா… ரபா.. ரபா…” என்று கூச்சலிட்டனர். இதனால், ரபேல் கண்ணீர் விட்டு அழுது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
டேவிஸ் கோப்பையில் தனது முதல் போட்டியில் தோற்ற ரபேல் நடால், தனது கடைசி போட்டியிலும் தோற்று கண்ணீருடன் விடைபெற்றார்.
கனவு கண்டதை விட
சாதித்தேன்
கண்ணீர் மல்க நடால் பேசியதாவது:
“நான் வென்ற பட்டங்கள் எல்லாம் எண்ணிக்கையில் உள்ளன, எனவே மக்கள் அதை அறிந்திருக்கலாம், ஆனால் நான் அதிகம் நினைவில் கொள்ள விரும்புவது மல்லோர்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான்” என்று நடால் கூறினார். “எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. நான் மிகச் சிறிய குழந்தையாக இருந்தபோது எனது கிராமத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்த என் மாமா, ஒவ்வொரு நொடியிலும் என்னை ஆதரிக்கும் ஒரு சின்ன குடும்பம்… நான் ஒரு நல்ல மனிதனாக, அவர்களின் கனவுகளைப் பின்பற்றிய குழந்தையாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். நான் கனவு கண்டதை விட சாதித்தேன்.
உண்மையாக சொல்ல வேண்டுமென்றல், எனது 20 வருட தொழில்முறை டென்னில் வாழ்க்கையில் நீங்கள் என்னை எப்போதும் உங்கள் தோள்களில் சுமந்தீர்கள். நல்ல தருணங்களில், அடுத்த புள்ளியில் வெற்றி பெற நீங்கள் உதவினீர்கள், மோசமான தருணங்களில், சந்தேகத்திற்கு இடமின்றி, நான் தொடர்ந்து சண்டையிட என்னைத் தொடர்ந்து முன்னோக்கி தள்ளினீர்கள், உங்கள் அனைவருடனும் என்னால் வாழ முடிந்தது. உண்மையாக, உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக ஸ்பெயினில் இருந்து இவ்வளவு அன்பைப் பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
உண்மை என்னவென்றால், இந்த மாதிரி இடத்திற்கு ஒருவரும் வர விரும்பவில்லை. நேர்மையாக, நான் டென்னிஸ் விளையாடுவதால் சோர்வடையவில்லை. என் உடல் இனி டென்னிஸ் விளையாட விரும்பாத நிலையை அடைந்துவிட்டது, எனவே நான் என் நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உண்மையிலேயே மிகவும் ஆசி பெற்ற நபராக உணர்கிறேன். எனது பொழுதுபோக்குகளில் ஒன்றை எனது தொழிலாக மாற்ற முடிந்தது, மேலும் நான் நினைத்ததை விட நீண்ட காலம். என்னுடன் இங்கு இருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் நன்றி மட்டுமே என்னால் முடியும், சிலர் இங்கு இல்லை, ஆனால் குறிப்பாக என் குடும்பம், சந்தேகத்திற்கு இடமின்றி நன்றி சொல்லி ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரபேல் நடால் கண்ணீருடன் விடைபெற்றதை கண்ட அவரது ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.