நியூயார்க், மார்ச் 10–
92 வயதான பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் ரூபர்ட் முர்டோக், தனது காதலியான எலினா ஜுகோவாவுடன் ஜூன் 1 ந்தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க பிரபல ஊடகவியலாளர் ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவுடன் கலிஃபோர்னியாவில் மொரகாவில் உள்ள அவரது திராட்சைத் தோட்டத்தில் வரும், ஜூன் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தம் நிறைவு
எலினா ஜுகோவா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்தவர். 67 வயதான இவர், ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். ரூபர்ட் முர்டோக்கின் மூன்றாவது மனைவி வெண்டி டெங் மூலம் எலினாவை, ரூபர்ட் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ரூபர்ட் முர்டோக் – எலினா இருவரும் கடந்த கோடைக்காலத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், முன்னதாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
கடந்தாண்டு ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் விலகினார். இந்த நிலையில், எலினாவை ரூபர்ட் முர்டோக் 5-வது திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.