நாடும் நடப்பும்

பிரபலங்களின் பலவீனம்


தலையங்கம்


பிரபலங்கள் தப்பு செய்து சிக்கிக் கொண்டால் அது நாடே அதிரும்படியான செய்தியாக மாறி விடுகிறது! ஏதோ அப்படிப்பட்ட தப்பு நம் நாட்டிலும் இருக்கிறதா? பிரபலங்கள் மட்டும் அதை செய்கிறார்களா? என்பன விவாதிக்கப்படுகிறது.

மது, சாராயம் குடிப்பவர்கள் கையிலிருக்கும் காசு குறையும் வரை குடிப்பார்கள். ஆனால் விலை உயர்ந்து ஆடம்பரப் போதை சமாச்சாரங்களை உபயோகிப்பவர்கள் ஆரம்பம் முதலே தப்பு செய்து தான் இதில் நுழைந்து தப்பு மேல் தப்பு செய்கிறார்கள்.

உல்லாச நகரமாக கருதப்படும் கோவாவில் இதுபோன்ற வஸ்துக்கள் மிக எளிதில் கிடைப்பதால் சர்வதேச சுற்றுலா பயணிகள் அங்கு குவிவதும் நாடறிந்த ஒன்று தான்.

சிறுவர்கள் ஒன்றும் புரியாத வயதில் ஈர்க்கப்பட்டு நகரப் பகுதிகளிலும் சுற்றுலா பகுதிகளிலும் கிடைக்கும் போதை தனத்தை விட புது அனுபவத்தை பெறும் பரவசத்தோடு தான் கோவா போன்ற பகுதிகளுக்கு வருகிறார்கள்.

பணக்காரர்கள், ஆடம்பர நட்பு வட்டம், அலுவலக வருடாந்திர கூட்டம் என குழுமங்கள் இதுபோன்ற பகுதிகளுக்கு வருவது நவநாகரீகம் என்ற போர்வையில் தான்!

அப்படி வருபவர்களை கண்காணித்தால் யார் என்ன தப்பு செய்கிறார்கள் என்பதை அரசு அதிகாரிகளுக்கு தெள்ளத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்!

அந்த வகையில் இந்த போதை வலையில் சிக்கியிருக்கும் பிரபல முன்னணி இந்தி திரையுலக நட்சத்திரம் ஷாருக் கானின் 23 வயதே ஆன மகன் நிலை பரிதாபத்துக்குரியதே!

அவன் ஆடம்பர வாழ்வின் அனைத்தையும் பிறந்த நாள் முதல் கண்டு வளர்ந்தவன், புகழின் அருமை பெருமைகளை கண்கூடாக கண்டு வளர்ந்தவன். கூடவே இருள் பகுதியான திரை நட்சத்திரங்களின் மறு பகுதியையும் கூடவே தொடர்ந்து வரும் விபரீதமான வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டும் இருந்தவன்!

டிக்கெட்டை கூட வாங்கித் தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயமின்றி உலலாச சொகுசு கப்பலில் துணைக்கு பொறுப்பான பெரியவர்கள் யாருமின்றி மும்பையில் இருந்து கோவாவிற்கு 3 நாள் ஜாலி பயணம் மேற்கொள்கிறான்.

துரதிர்ஷ்டவசமாக அதே கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ரகசிய காவல்துறை அதிகாரிகளும் பயணிக்கின்றனர். திடீர் சோதனையில் பலரிடம் விதவிதமான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சிக்குகிறது!

ஷாருக்கான் மகனிடமும் இருந்ததால் கைது செய்யப்படுகிறான், 3 நாட்கள் காவலில் வைக்க அனுமதி பெற்று விசாரணை தொடங்க நாடெங்கும் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாய் மாறுகிறது.

ஷாருக்கானின் மகன் வயதுள்ள இளைஞர்கள் பலர் இச்செய்தியை பார்க்கும்போது ஏற்படும் மனநிலையை பற்றி சிந்திக்க மத்திய – மாநில அரசுகள் இனியும் தாமதிக்கக் கூடாது.

கடந்த 20 மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்த அந்த இளவட்டங்கள் சமீபமாக சுதந்திர பறவைகளாக தத்தித் தாவி பறக்க துவங்குகையில் தவறான பாதை எது? என்பதைக் கவனித்தா பயணிக்கும் மனநிலை பெற்றிருப்பார்கள்?

கையில் இருக்கும் பண வசதிக்கேற்ப போதை தனத்தை பெறத் துவங்கும் இளைய சமுதாயத்தை வழி நடத்த மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை மிக அவசியம் தேவை.

போதைப் பொருள் தடுப்புத் துறை மிக கண்டிப்பாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். வழங்கப்பட இருக்கும் தண்டனையைக் கண்டு பிற இளைஞர்களும் இதுபோன்ற தவறானவற்றுக்கு போய்விடக் கூடாது என்ற பயத்தை தரும் விதமாக மட்டுமே செய்திகள் வர வேண்டும்.

பிரபல நடிகர் கண்ணீர் என்றவுடன் அது தலைப்பு செய்தியாய் மாறுகிறது, அவரே தான் செய்த தவற்றை திருத்திக் கொள்ள ஏதேனும் முடிவெடுத்தால் அதில் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கப் பட்டு மேலும் விவாதங்கள் தொடர்கிறது. மொத்தத்தில் இதுபோன்ற சம்பவம் பிரபலங்களுக்கு புது வித விளம்பர தளமாக மாறி விடுகிறது!

எது எப்படியோ பிரபலங்களின் செல்வாக்கு அவர்களது உருவம் பொதுமக்கள் பார்வையில் தொடர்வதால் வருவதாகும். இப்படித் தவறுகளைச் செய்ததால் கிடைக்கும் விளம்பரம் அவர்களுக்கு சாதகமாக? பாதகமா? என்ற விவாதத்தைவிட சமுதாயத்தில் உள்ள பிறர் நிலையைப் பற்றிய கண்ணோட்டத்தை மறந்து விடக் கூடாது.

உப்பைச் சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டிக்கப்படுவான் என்ற கூற்றை மக்கள் மறந்தும் விடக்கூடாது. இதுபோன்ற தவறுகளை வளர்ந்த வல்லரசு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை மிக கொடூரமானவையாகும்.

ஷாருக்கான் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகளில் ஒன்று துபாயிலும் இருக்கிறது அல்லவா? அந்த நாட்டு சட்டப்படி போதைப் பொருள் உபயோகத்திற்கு நம் நாட்டில் தண்டனை வழங்கி விட முடியாது தான். ஆனால் அங்கே செல்லும்போது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாத தண்டனையை பற்றியும் நமது சட்ட வல்லுநர்கள் யோசித்தாக வேண்டும்.

இது இனம், மதம் ஆகியவற்றுக்கு அப்பால் இளம் தலைமுறையைப் பாதிக்கும் செய்தி என்பதை உணர்ந்து சமூக தளங்களில் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டுமென தகவல் ஒளிபரப்புத் துறை விளம்பரப்படுத்தினாலும் அது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *