அலுவலகம் முடிந்து, அவரவர் வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இரவுக்கும் பகலுக்குமான அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்தப் பிரதான சாலை ரொம்பவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஷேர் ஆட்டோ, பேருந்து , கார், இருசக்கர வாகனம் சைக்கிள் என்று எல்லாவிதமான வாகனங்களும் முந்தி அடித்து ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டு போகும் அந்த தார் சாலையின் ஓரத்தில் கட்டப்பை அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த செருப்புகள், பிளாட்பார்ம் விட்டுக் கீழே இறங்கி, கை கால்களை நீட்டிப் போதையில் படுத்த வண்ணம் கிடந்தான் ஒரு குடிகார மனிதன்.
வாகனம் வந்தால் தன்னை ஏற்றி விடும் என்றோ ? இது ஆபத்தான சாலை என்றோ ? அறியாமல் அங்குமிங்கும் ஆடிப் புரண்டு உருண்டு கிடந்தான். நான்கு பக்கம் செல்லும் பேருந்துகள் அந்த நிறுத்தத்தில் நிற்கும் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே நின்று கொண்டிருந்தது .
கீழே கிடந்த அந்த மனிதனை ஒரு மனிதனாகவே கருதாத மனிதர்கள் தங்களின் பேருந்துக்காக மட்டுமே காத்துக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் செல்போனில் பேசுவதும் சிரிப்பதுமாய் இருந்தார்கள். சில காதல் ஜோடிகள் அந்தப் பிரதான சாலையிலும் சில்மிஷம் செய்த படியே இருந்தார்கள். அவரவர் கவனமெல்லாம் அவரவர் வாழ்க்கை பாதையிலேயே இருந்தது. தவறியும் தார் சாலையில் கிடக்கும் மனிதனை அவர்கள் கவனிக்கவே இல்லை.
இரு கைகளை நீட்டிப் படுத்திருந்தவனைப் பார்த்து ஒருவருக்கும் பதட்டமில்லை. நிச்சயம் அவன் கீழே கிடப்பதை பார்க்காமல் ஒரு வாகனம் வந்தால் அவன் கையைக் கரும்பு சக்கையாக ஆகிவிடும் என்பது அங்கிருக்கும் மனிதர்களுக்கு ஒரு பயமும் இல்லை.
காரணம் அவன் யாரோ ஒருவன் தான். நம் சொந்தமில்லை. நமக்கு பழக்கமானவன் இல்லை. நம் நண்பன் இல்லை. நம் இனம் இல்லை . ஆனால் நம்மைப் போன்ற ஒரு மனிதன் என்பது அங்கிருந்த எந்த மனிதனுக்கும் அங்கு உரைக்கவில்லை . அவன் அப்படி இப்படிக் கிடந்ததை பார்த்த ஒரு ஏழைக் கிழவி அவன் அருகே வந்து நீட்டி கிடந்தவன் கைகளை தூக்கித் நெஞ்சில் வைத்தாள். சிதறிக் கிடந்த இரண்டு செருப்புகளையும் ஒன்றாய் சேர்த்தாள். கவிழ்ந்து கிடந்த கட்டப்பையை எடுத்து நிமிர்த்தி வைத்தாள்.
அவன் கன்னம் இரண்டிலும் லேசாகத் தட்டி
தம்பி, தம்பி, தம்பி என்று போதையில் கிடந்த மனிதனை எழுப்பினாள்.அவன் எழவே இல்லை.
“நல்ல போதை பாட்டி. தெளிஞ்சாத்தான் அவரு எழுந்திருப்பாரு. நீங்க இந்த பக்கம் வாங்க”
என்ற அந்தப் பாட்டியை ஒருவன் அழைத்த போது,
” இல்ல தம்பி .யாரு பெத்த புள்ளையோ இப்படிக் கிடக்கான். ஏதாவது வண்டி கிண்டி வந்து அவன் கை கால்ல ஏத்திருச்சுன்னா ஒன்னும் இல்லமா போயிடுவான்பா; இவன தூக்கி இந்த பிளாட்பார்ம்க்கு மேல போட முடியுமா? என்றாள் அந்தக் கிழவி
” நமக்கு எதுக்கு பாட்டி இந்த வம்பு. அவனை தூக்கி மேல போட ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருச்சுன்னா நாம தான் தூக்கி போட்டோம்னு பிரச்சனை வந்து சேரும் . இல்ல நான் நிறைய பணம் வச்சிருந்தேன், அது காணாம போயிருச்சு. இவங்க தான் தூக்கிட்டு போட்டாங்கன்னு போலீஸ் நம்ம கிட்ட வந்தாலும் வரும். நமக்கு எதுக்கு பாட்டி வம்பு ? என்றான் அந்த நடுத்தர வயது மனிதன்.
“இல்ல தம்பி; மனசு கேட்கல. என்ன ஆனாலும் பரவால்ல. அவனத் தூக்கி பிளாட்பார்மில போடுய்யா எவனாவது இவனை மாதிரி குடிச்ச வண்டி ஓட்டிட்டு வந்தாலும் தெரியாம யாராவது வண்டி ஓட்டிட்டு வந்து இவன் கை கால்ல ஏத்தினா செத்துப் போயிருவான்.
இவன நம்பி குடும்பம் குட்டி இருக்கலாம். பிள்ளைகள் இருக்கலாம். .அப்பா நல்ல முறையில் வெளியே போனாரு நல்ல முறையில திரும்பி வருவாருன்னு. அவங்க வீட்ல நினைச்சுகிட்டு இருப்பாங்க . ஆனால் இப்படி கிடக்கிறான்? நமக்கு வேணும்னா அது சாதாரணமாக தெரியலாம்பா அவனுடைய இழப்பு அவன் குடும்பத்துக்கு பெருசா இருக்கும். ” என்று பெரிய வாழ்வியலை உதிர்த்தாள் அந்தக் கிழவி.
இந்த வயதான கிழவிக்கு இருக்கும் அந்த உணர்வு கூட அங்கே நின்று கொண்டு இருந்தவர்களுக்கு இல்லை. அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
” சரி பாட்டி ” என்ற அந்த நடுத்தர வயது மனிதன், அவன் காலைப் பிடித்துக் கொண்டான்; கிழவி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். இருவரும் சற்றுச் சிரமப்பட்டே தூக்கி மேலே போட்டார்கள். அவன் செருப்பு, கட்டைப் பையை எடுத்து அவன் அருகே வைத்தாள் அந்தக் கிழவி. தன் பெத்த மகனைப் போல மறுபடியும் அவனை சரி படித்தி, அவனை ஒழுங்குபடுத்தி விட்டு தான் பேருந்து நிலையத்திலே நின்றாள். அதுவரை இதையெல்லாம் கவனிக்காத அந்த மனிதர்கள் அந்தக் கிழவியின் செய்கையை பார்த்து பாராட்டினார்கள்.
பாட்டி நீங்க ரொம்ப நல்லது பண்றீங்க? இங்க இருக்கக் கூடிய எந்த மனுசனும் அவன ஒரு மனுசனாவே நினைக்கல. உங்க கண்ணுக்கு மட்டும் தான் அவன் மனுசனா தெரிஞ்சு இருக்கான் என்று சொல்ல
அந்த கிழவியின் கண்களில் கண்ணீர் வடிந்தது
” தம்பி குடிச்சிட்டு படுத்துட்டு இருக்கறவன் நமக்கு யாருன்னு கூடத் தெரியாது .ஆனா அது உயிர் தம்பி . அவனுக்கு தான் அறிவில்லாம போதையில கிடக்கிறான். நமக்கு அறிவு இருக்கு. அந்த உசுர காப்பாத்துறது நம்ம ஒவ்வொருத்தருடைய கடமை. இப்படித்தான் என் மகன் ரொம்ப நாளைக்கு முன்னாடி குடிச்சிட்டு ரோட்டில கிடந்தான் . அவன மேல ஒரு லாரி ஏறி, அவன் அங்கயே செத்துப் போயிட்டான். அவ இல்லாம அவன் பொண்டாட்டி. புள்ள , நான் எவ்வளவு கஷ்டப்படுறோம்னு எங்களுக்கு தான் தம்பி தெரியும். முடிஞ்ச வரைக்கும் நமக்கு நேர்மை, உண்மை நல்லதுன்னு தெரிஞ்சா உதவி செய்றது தப்பு இல்ல தம்பி. அப்படி என் புள்ள குடிச்சிட்டு படுத்துக் கெடக்கும் போது என்ன மாதிரி ஒரு மனுசி அவனக் காப்பாத்தி இருந்தா என் புள்ள இன்னைக்கு உசுரோட இருந்திருப்பான்.
அவன அன்னைக்கு யாரும் காப்பாத்தல. போய் சேர்ந்துட்டான். அந்த நியாபகம் வந்துருச்சு தம்பிஎன்று தேம்பி அமுதாள் அந்த மூதாட்டி .
அதுவரையில் அந்தக் கிழவியிடம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் அவரவர் திசைக்குப் போகும் பேருந்துகள் வர ஆளாய் பறந்து பேருந்தில் ஏறினார்கள். கன்னத்தில் கண்ணீர் வழிய தன் சேலை முந்தானையை எடுத்துத் துடைத்துக் கொண்டு கிழவி குடித்து கிடந்தவனைப் பார்த்தாள். அவன் கை கால்களை ஆட்டிக்கொண்டு எதை எதையோ முணங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க கிழவியின் மகன் ஞாபகம் வந்தது. இப்போது அவள் கண்களில் அதிகமாக கண்ணீர் வடிந்தது. அவள் போகும் பேருந்தை நிறையத் தவறவிட்டாள்.
என்ன பாட்டி இங்கயே உக்காந்து இருக்கீங்க ? வீட்டுக்கு போகலையா ? என்று அங்கே இருந்த ஒருவன் கேட்டபோது
தம்பி இந்த குடிகாரன் திரும்பவும் பிளாட்பாரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் விழுந்துருவான். அவனுக்கு கொஞ்சம் போதை தெளியட்டும். நான் அடுத்த பஸ்க்கு வரேன். நீங்க போங்க “என்ற அந்தமூதாட்டி பேருந்து. நிலையத்திலேயே இருந்தாள். அந்தக் குடிகாரன் எதையோ உளறிக் கொண்டிருந்தான்.
தாய்க்கிழவி அழுது கொண்டே இருந்தாள். அவள் செல்லும் பேருந்துகள் எத்தனையோ அவளை கடந்து சென்று கொண்டிருந்தன. அவள் அதில் ஏறவே இல்லை. குடிகாரன் முணங்கிக் கொண்டே கிடந்தான்.
அவன் தெளியும் வரை காத்திருந்தாள் அந்தத் தாய் .
#சிறுகதை
பிரதான சாலையில் மக்கள் இன்னும் மாக்களாய் இருக்கும் போது அந்த பாட்டி மட்டுமே மனித உயிர் பற்றிய கவலை. இதைதான் மனித நேயம் என்பது. வாழ்க வளர்க.