செய்திகள்

பிரதமர் வேட்பாளர் குறித்த சிந்தனை இல்லை; பாஜக, ஆர்எஸ்எஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே மைய சிந்தனை

இங்கிலாந்து செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி விளக்கம்

லண்டன், மார்ச் 5–

பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்ற போதெல்லாம் இந்தியாவில் ஊழல் உள்ளது என்றும் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் நாட்டை அவதூறு செய்தார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு ஒரு வார கால பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம் மற்றும் இந்தியா-சீனா உறவுகள் குறித்த விவாதங்களை நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் மாணவர்களிடையே நேற்று பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது எனவும், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்கட்சி தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பாஜகவை தோற்கடிப்பதே மையசிந்தனை

அதைத் தொடர்ந்து அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் காந்தி இழிவு படுத்துவதாக பாஜகவினர் பொங்கினர். இந்தநிலையில் லண்டனில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுக்கு பாஜகவினரால் சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றியோ அல்லது அவரது அரசைப் பற்றியோ கேள்வி எழுப்புபவர்கள் தாக்கப்படுகின்றனர்.

நான் அடுத்த பிரதமர் வேட்பாளரா என்பது இப்போது விவாதத்திற்கு இல்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை தோற்கடிப்பதே எதிர்க்கட்சிகளின் மைய சிந்தனை. வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு மக்களிடம் பேசுவதன் மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் ஒருவர் தீர்த்து வைப்பார் என்ற எண்ணம் மேலோட்டமானது. மேலிருந்து கீழாக, ஒரு மனிதனாக, நரேந்திர மோடி பாணியில் மந்திரக்கோலை வைத்துக்கொண்டு ஓடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. விஷயங்களை சரிசெய்யப்பட வேண்டும்.

அவதூறு செய்தது மோடிதான்

வெளிநாடுகளில் இந்தியாவை அவதூறு செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் தனது பேச்சு மூலம் இந்தியாவை மோசமாகக் காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி தான். கடந்த முறை பிரதமர் வெளிநாடு சென்று 70 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்தும் இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று அறிவித்ததை நினைவு கூர்கிறேன்.

இந்தியாவில் எல்லையில்லா ஊழல் உள்ளது என்றார். இதையெல்லாம் பிரதமர் மோடி வெளிநாட்டில் சொன்னார். எனது வார்த்தைகளை பாஜக திரித்துவிட்டது. எனது நாட்டை நான் ஒருபோதும் அவதூறாகப் பேசியதில்லை. அதைச் செய்யமாட்டேன். 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறும்போது, அது ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்.

எங்களை எங்கள் நாட்டின் உள்ளே வந்து சீனா ஆதிக்கம் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால் உண்மை என்னவென்றால், சீனர்கள் எங்கள் எல்லைக்குள் நுழைந்தனர், எங்கள் வீரர்களைக் கொன்றனர், பிரதமர் அதை மறுத்தார், மக்களுக்கு இது குறித்த செய்திகள் மறைக்கப்பட்டன’’ என ராகுல் காந்தி இங்கிலாந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது தெரிவித்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *